செப்டம்பரில் விடுதலை இல்லை.. சசிகலாவுக்கு ஷாக் கொடுத்த பரப்பன அக்ரஹாரா சிறை.. என்ன செய்யப்போகிறார் டிடிவி?

By Selva KathirFirst Published Sep 22, 2020, 10:32 AM IST
Highlights

செப்டம்பரில் சசிகலா விடுதலைக்கு வாய்ப்பு இல்லை என்று பெங்களூர் சிறை நிர்வாகம் திட்டவட்டமாக கூறிவிட்டதால் தினகரன் என்ன செய்யப்போகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

செப்டம்பரில் சசிகலா விடுதலைக்கு வாய்ப்பு இல்லை என்று பெங்களூர் சிறை நிர்வாகம் திட்டவட்டமாக கூறிவிட்டதால் தினகரன் என்ன செய்யப்போகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

சசிகலா சிறையில் இருந்து ஷாப்பிங் சென்று வருவதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக பெங்களூர் சிறை நிர்வாகம் விசாரணை நடத்தியது. அதில் சசிகலாவிற்கு சிறை விதிகளை மீறி சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அப்போதைய சிறைத்துறை டிஜிபிக்கு 20 கோடி ரூபாய் அளவிற்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பான விசாரணை தற்போதும் நிலுவையில் உள்ளது. அதாவது சசிகலா சிறையில் சலுகைகளை அனுபவிக்க லஞ்சம் கொடுத்தார் என்கிற புகார் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் தான் சசிகலாவின் தண்டனை காலம் முடிவுக்கு வருகிறது. ஜனவரி மாதம் 27ந் தேதியுடன் தண்டனை முடிந்து சசிகலா சிறையில் இருந்து விடுவிக்கப்படலாம் என்று பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் கூறியுள்ளது. ஒருவேளை நீதிமன்றம் விதித்த பத்து கோடி ரூபாய் அபராதத்தை செலுத்தவில்லை என்றால் மேலும் ஓராண்டு வரை சசிகலா சிறையில் இருக்க வேண்டும். ஆனால் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனோ, சசிகலா இந்த மாத இறுதியில் சிறையில் இருந்து வெளியே வர உள்ளதாக கூறி வருகிறார்.

நன்னடத்தை காரணமாக சிறையில் சசிகலா ஈட்டிய சிறை விடுப்புகள் சுமார் 130 நாட்களை கழித்து 4 மாதங்கள் முன்னதாகவே சசிகலா சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்து வருகிறார். இதற்காக பத்து கோடி ரூபாய் அபராதத்தை செலுத்தும் நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளதாக அவர் கூறிக் கொண்டு இருக்கிறார். ஆனால் இந்த விவகாரத்தில் பரப்பரன அக்ரஹார சிறை நிர்வாகம் தொடர்ந்து அமைதி காத்து வருகிறது. இதற்கிடையே சசிகலா நன்னடத்தை விடுப்பு அடிப்படையில் செப்டம்பரில் வெளியே வர உள்ளாரா என்று வழக்கறிஞர் நரசிம்மமூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெங்களூர் சிறை நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவர் ஏற்கனவே எழுப்பிய கேள்வியின் அடிப்படையில் தான் சசிகலாவை ஜனவரி 27ந் தேதி விடுவிக்க உள்ளதாக பெங்களூர் சிறை நிர்வாகம் கூறியிருந்தது. தற்போது நரசிம்மமூர்த்தி புதிததாக எழுதியுள்ள கேள்விக்கும் சிறை நிர்வாகம் பதில் அளித்துள்ளது. அதன்படி, பெங்களூர் சிறையின் விதிகளின் அடிப்படையில், ஆயுள் தண்டனை கைதிகளுக்கு மட்டுமே நன்னடத்தை அடிப்படையில் சிறை நாட்களை குறைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சசிகலா 4 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை பெற்றுள்ளார்.

எனவே அவரது தண்டனையை குறைக்க வாய்ப்பு இல்லை என்று பெங்களூர் சிறை நிர்வாகம் நரசிம்மமூர்த்திக்கு பதில் அளித்துள்ளது. இந்த தகவல்களை ஆதாரத்துடன் நரசிம்மமூர்த்தி வெளியிட்டுள்ளார். இதன் மூலம் சசிகலாவை செப்டம்பர் இறுதியில் விடுவிக்க பெங்களூர் சிறை நிர்வாகம் தயாராக இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஆனால் சசிகலா இந்த மாத இறுதியில் விடுதலை என்பதில் தினகரன் தரப்பு உறுதியாக உள்ளது. அதனால் தான் தனி விமானத்தில் டிடிவி அவசரமாக டெல்லி விரைந்துள்ளார். அவர் டெல்லியில் உள்ள நிலையில், சசிகலா செப்டம்பரில் விடுதலை இல்லை என்று பெங்களூர் சிறை நிர்வாகம் கூறியுள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

டெல்லியில் முகாமிட்டுள்ள தினகரன் கடந்த இரண்டு நாட்களாக மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் வழக்கறிஞர்கள் யாரும் இந்த விவகாரத்தில் வழக்கு தொடர எந்த முகாந்திரமும் இல்லை என்கிறார்கள். அதாவது நன்னடத்தை விடுதலை என்பது முழுக்க முழுக்க சிறை நிர்வாகம் தொடர்புடையது, அதில் நீதிமன்றம் தலையிடாது என்று வழக்கறிஞர்கள் கூறி வருகின்றனர். எனவே சிறை நிர்வாகத்திடம் பேசுவது தான் சரியாக இருக்கும் என்று தினகரனுக்கு ஆலோசனை கூறியுள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் தினகரன் தரப்பில் யாருடனும் பேச சிறை நிர்வாகம் தயாராக இருக்காது என்கிறார்கள்.

ஏனென்றால் ஏற்கனவே சிறையில் சசிகலாவிற்கு சலுகைகள் கொடுக்க லஞ்சம் கைமாறிய ஒரு புகார் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் விதிகளின் அடிப்படையில் சசிகலாவை முன்கூட்டியே விடுவித்தாலும் அதன் பின்னணியில் பணம் கைமாறியிருக்கலாம் என்று விமர்சனங்கள் எழும். எனவே சசிகலா விடுதலை விவகாரத்தில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் ரிஸ்க் எடுக்காது என்கிறார்கள். கர்நாடக ஆட்சியாளர்கள் மனம் வைத்தால் தான் சசிகலா விடுதலை முன்கூட்டியே சாத்தியம் ஆகும் என்பதால் இனி டிடிவி தனது வியூகத்தை வேறு பக்கமாக மாற்றியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

click me!