திருவண்ணாமலையில் இலைக்கு இடமில்லை.. வரலாற்றில் வெற்றியை ருசிக்காத அதிமுக.. பாஜகவுக்கு தள்ளிவிட திட்டம்..!

By vinoth kumarFirst Published Mar 1, 2021, 5:03 PM IST
Highlights

திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் வரலாற்றில் ஒரு முறை கூட அதிமுக வெற்றி பெறவில்லை என்பதால் கூட்டணி கட்சியான பாஜகவிற்கு தள்ளிவிட திட்டமிட்டுள்ளது. 

திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் வரலாற்றில் ஒரு முறை கூட அதிமுக வெற்றி பெறவில்லை என்பதால் கூட்டணி கட்சியான பாஜகவிற்கு தள்ளிவிட திட்டமிட்டுள்ளது. 

தமிழக தேர்தல் வரலாற்றில் திருவண்ணாமலை தொகுதியில் கடந்த 1957ம் ஆண்டு முதல் கடந்த 2016ம் ஆண்டு வரை 14 சட்டமன்ற தேர்தல்களில் 9 முறை திமுகவும், 5 முறை காங்கிரஸ் வெற்றிவாகை சூடியுள்ளது. கடந்த 1996ம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 முறை இந்த தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளது. திமுக தொடங்கப்பட்ட நாள் முதல், திமுகவின் கோட்டை என அழைக்கும் அளவுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கின்றன. 

கடந்த 1972ல் அதிமுக உருவானபிறகு 1977 முதல் 2016 வரை 11 சட்டமன்றத் தேர்தல்களை அக்கட்சி  சந்தித்திருக்கிறது. ஆனாலும், திருவண்ணாமலை தொகுதியில் இதுவரை ஒருமுறைகூட இரட்டை இலை வென்றதில்லை. அதனால், இந்த தொகுதியில் இரட்டை இலையில் போட்டியிடுவது சாதகம் இல்லை என உணர்ந்த அதிமுகவினர் இத்தொகுதியில் போட்டியிடுவதை விரும்புவதில்லை. 

மேலும், இந்த தொகுதியில் நேரடியாக களம் இறங்குவதை தவிர்த்து 1991 மற்றும் 1996ல் காங்கிரசுக்கும், 2001ல் பாமகவுக்கும் இந்த தொகுதியை ஒதுக்கிவிட்டு அதிமுக ஒதுங்கிக்கொண்டது. அதன்பிறகு கூட்டணிகளும் இந்த தொகுதியை விரும்பாததால் அதிமுக சார்பில் 2006ல் போட்டியிட்ட முன்னாள் நகராட்சித் தலைவர் பவன்குமார், 2011ல் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.ராமசந்திரன், 2016ல் போட்டியிட்ட முன்னாள் மாவட்ட செயலாளர் பெருமாள்நகர் ராஜன் ஆகியோர் தோல்வியையே தழுவினர். மேலும், இந்த தொகுதியில் போட்டியிட்ட அதிமுகவினரின் அரசியல்வாழ்வும் சரிவை சந்தித்தது. இதனால், இந்த தொகுதியில் போட்டியிடுவது ராசியில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். 

இந்த நிலையில், தமிழகத்தில் 16-வது சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே, இந்த தொகுதியை அதிமுக கூட்டணி கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கியுள்ளது. பாஜக சார்பில் மாநில வர்த்தக அணி துணைத் தலைவராக உள்ள தணிகைவேல் போட்டியிட உள்ளதாகவும், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு போட்டியிட உள்ளார். 

click me!