நீட் தேர்வு ஓ.எம்.ஆர். விடைத்தாளில் முறைகேடு வழக்கு.. சிபிசிஐடி விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

By Ezhilarasan BabuFirst Published Mar 1, 2021, 4:31 PM IST
Highlights

தேசிய தேர்வு முகமை (National testing agency )சார்பில், குற்றச்சாட்டுகளில் அடிப்படை முகாந்திரம் இருந்தால் மட்டுமே சிறப்பு புலனாய்வு பிரிவு  விசாரணைக்கு உத்தரவிட முடியும் எனவும் இந்த வழக்கில் அப்படி ஏதும் முகாந்திரம் இல்லை எனவும் வாதிட்டார். 

நீட் தேர்வு ஓ.எம்.ஆர். விடைத்தாளில்  முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு நடந்து முடிந்த பின் அக்டோபர் மாதம் 5 ம் தேதி தேசிய தேர்வு முகமை அதன் இணையதளத்தில் ஓ.எம்.ஆர். விடைத்தாள்களை வெளியிட்டது.

இதில் அக்டோபர் 8 ம் தேதி முதல் 16 ம் தேதி வரை 700 க்கு 594 மதிப்பெண்கள் பெற்றதாக காட்டிய நிலையில், அக்டோபர் 17 ம் தேதி திடீரென தன்  மதிப்பெண்களை 248 ஆக  குறைத்து ஓ.எம்.ஆர். வெளியிடப்பட்டதாகக் கூறி, கோயம்புத்தூரை சேர்ந்த  மனோஜ் என்ற  மாணவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தன் கூகுள் கணக்கில் இருந்து மீட்டெடுத்த தரவுகள் மற்றும் அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் 594 மதிப்பெண் என காட்டிய ஸ்க்ரீன் ஷாட் புகைப்படங்களும் மாணவர் தரப்பில் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டது.

 

இந்த வழக்கு விசாரணை நீதிபதி புகழேந்தி முன்பு நடைபெற்று வந்தது.மாணவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு தனிப்பட்ட மாணவரால் இணையத்தின் மூலம் நீட் மதிப்பெண்ணை திரிக்க முடியும் என வாதத்திற்காக கூறினால், எண்ணற்ற மாணவர்கள் இதை செய்திருக்க கூடும் என்றார். தேசிய தேர்வு முகமையின் குளறுபடியால் மாணவர் பலிகடா ஆகியுள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது, இந்த வழக்கில், சைபர் குற்றங்களை கண்டறிவதில்  நிபுணத்துவம் பெற்ற சிபிஐ அதிகாரிகள் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த  பிரதிநிதிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு பிரிவை (Special investigation team) அமைக்கலாமா என நீதிபதி கேள்வி எழுப்பி இருந்தார்.

ஆனால், அதற்கான அவசியம் ஏதும் இல்லை என தெரிவித்த மத்திய அரசு, ஒவ்வொரு மாநிலமும் தன் பங்குக்கு அவர்கள் பிரதிநிதிகளை நியமிக்க கோருவர் எனவும், தேசிய தகவலியம் மையம் ( National informatics centre) இந்த விவாகரங்களில் கைதேர்ந்தது என்பதால் அவர்கள் இதனை விசாரிக்கட்டும் எனவும், அவர்கள் சுதந்திரமான அமைப்பு என்பதால் இதில் மத்திய அரசின் குறுக்கீடு ஏதும் இருக்காது என விளக்கம அளிக்கபப்ட்டிருந்தது. 

தேசிய தேர்வு முகமை (National testing agency )சார்பில், குற்றச்சாட்டுகளில் அடிப்படை முகாந்திரம் இருந்தால் மட்டுமே சிறப்பு புலனாய்வு பிரிவு  விசாரணைக்கு உத்தரவிட முடியும் எனவும் இந்த வழக்கில் அப்படி ஏதும் முகாந்திரம் இல்லை எனவும் வாதிட்டார். மேலும், ரசாயண முறையில் தயாரிக்கப்பட்டுள்ள ஓ.எம்.ஆர் தாளின் திருத்தம் செய்யவோ, ஏற்கனவே எழுதியவற்றை அழிக்கவோ முடியாதெனவும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் அது இந்த நிறுவனத்தின் மீதும், கட்டமைப்பின் மீதும் தவறான பிம்பத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்திருந்த நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சைபர் கிரைம் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளை  நியமித்து விசாரணை நடத்த  சிபிசிஐடி'க்கு உத்தரவிட்டார். மேலும், யார் மீதும் வழக்கு பதிவு செய்யாமல் ஆரம்பக்கட்ட விசாரணை மட்டும் மேற்கொண்டு மூன்று மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி காவல்துறையினருக்கு உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கை முடித்து வைத்தார். 

click me!