ஜூலை 11 ஆம் தேதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர் செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பொதுக்குழு நடத்த அனுமதிக்க கூடாது
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானங்களையும் நிறைவேற்றக்கூடாது என்ற நீதிமன்ற கட்டுப்பாடுகளோடு நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. ஆனால் பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அதிமுக அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டார்.திடீரென அடுத்த பொதுக்குழுக்கான தேதியை அறிவிக்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் சி.வி.சண்முகம் மற்றும் கே.பி.முனுசாமி கேட்டுக்கொண்டனர். இதனையேற்று அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் ஜூலை 11 ஆம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ் பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறினார். அப்போது ஒரு சிலர் தண்ணீர் பாட்டில்களை ஓபிஎஸ் மீது வீசினர். இதனால் அந்த இடமே பரபரப்புக்குள்ளானது.
தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு
சட்ட விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழு நடைபெறவில்லையென்றும், இந்த பொதுக்குழு செல்லாது என ஓபிஎஸ் தரப்பினர் தெரிவித்தனர். இந்தநிலையில் குடியரசு தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் டெல்லி சென்றுள்ளனர். இந்தநிலையில் அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் சார்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் இன்று வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன் மனு அளித்துள்ளார்.அந்த மனுவில் நீதிமன்ற உத்தரவை அடுத்த நேற்று நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் தமிழ்மகன் உசேன் நிரந்தர அவை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவர் நியமனத்தில் கட்சி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எனக்கு உடன்பாடு இல்லை. அதற்கு நான் ஒப்புதல் வழங்கவில்லை. பொதுச் செயலாளர் என்ற பதவி இல்லாததால் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டது.
விதிகளில் மாற்றம் செய்ய முயற்சி
தற்போது அந்த பதவியை நீக்கிவிட்டு மீண்டும் பொதுச்செயலாளர் பதவியில் சட்டவிரோதமாக உருவாக்க முயற்சி நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கூட்ட வேண்டிய பொதுக்குழு மற்றும் செயற்குழு அவைத் தலைவரை வைத்து அழைப்பு விடுத்துள்ளது எனவே வருகிற ஜூலை 11-ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல் அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளும் முயற்சிக்கும் அனுமதிக்கக் கூடாது என்றும் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ் தரப்பில் மனோஜ் பாண்டியன் சார்பாக ஆன்லைன் மூலமாக தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் தேர்தல் ஆணையரை நேரடியாக சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்