பழங்குடியினருக்கு என்ன செய்தார் திரெளபதி முர்மு.? அவர் பாதுகாவலர் ஆயிடுவாரா.? யஷ்வந்த் சின்ஹா ஆட்டம் ஆரம்பம்!

By Asianet TamilFirst Published Jun 24, 2022, 7:28 AM IST
Highlights

பொதுவாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் ஒருவர் பிறந்துவிட்டதன் காரணத்தினாலேயே அவர் தானாகவே அந்தச் சமூகத்தின் பாதுகாவலர் ஆகி விட முடியாது என்று குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராகப் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் 16-வது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஜூலை 18 அன்று நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். திரெளபதி முர்மு இன்று டெல்லியில் தன்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்ய உள்ளார். யஷ்வந்த் சின்ஹா பீகாரின் பாட்னாவிலிருந்து குடியர்சுத் தலைவர் தேர்த;லுக்கான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் தேர்தல் போட்டி தொடர்பாக யஷ்யவந்த் சின்ஹா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

“இந்த முறை நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தல் என்பது ஓர் அடையாள போட்டி கிடையாது. இது சித்தாந்தத்துக்கான போட்டி ஆகும். இத்தேர்தல் முர்முவா, சின்ஹாவா என்பதை அடையாளம் பற்றிய கேள்வி அல்ல. இந்தியாவின் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாக்கவே நான் களத்தில் இறங்கியிருக்கிறேன். திரெளபதி முர்மு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். ஆனால், பழங்குடியின மக்களுக்காக அவர் என்ன செய்திருக்கிறார்? இதற்கு முன்பு அவர் ஜார்கண்ட் ஆளுநராக இருந்திருக்கிறார். அவ்வளவுதான். பொதுவாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் ஒருவர் பிறந்துவிட்டதன் காரணத்தினாலேயே அவர் தானாகவே அந்தச் சமூகத்தின் பாதுகாவலர் ஆகி விட முடியாது. 

மத்தியில் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நான் நிதி அமைச்சராக இருந்திருக்கிறேன். அந்தக் காலகட்டத்தில் நான் தாக்கல் செய்த 5 பட்ஜெட்டுகளை எடுத்துப் பாருங்கள். பழங்குடி இன சமூகத்தினருக்காக அதிகம் செய்திருக்கிறேன். ஒவ்வொரு பட்ஜெட்டின் போதும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உள்பட நலிவடைந்த பிரிவினருக்காகவும் பெண்களுக்காகவும் சிறப்பு ஒதுக்கீடுகளைச் செய்திருக்கிறேன். இது நான் பணியாற்றியபோது இருந்த அரசின் கொள்கை” என்று ய்ஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். 

click me!