ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா.. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் முறையீடு.. விசாரணை தேதி வெளியானது..!

By vinoth kumarFirst Published Feb 18, 2021, 9:43 AM IST
Highlights

அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்த தீர்மானத்தை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு 4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வருகிற மார்ச் 15-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. 

அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்த தீர்மானத்தை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு 4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வருகிற மார்ச் 15-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. 

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து, இந்த  பொதுக்குழுக்கூட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். அதில், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா உள்ள நிலையில் கட்சி விரோதமான செயல்பாடுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களும் மேற்கொண்டு வருகிறார்கள். 

எனவே, பொதுக்குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் செல்லாது என்று அறிவிக்க வேண்டும். தங்களை கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் துணைப்பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், கட்சியின் வங்கி கணக்குகள் குறித்த விவரங்களையும், கட்சி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அதிமுக தலைமைக்கழக மேலாளர் மகாலிங்கம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையடுத்து, அதிமுக தலைமை கழக மேலாளர், வங்கிகளின் மேலாளர்கள் வங்கி கணக்குகளை சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் தரப்பினருக்கு வழங்கினர். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார்.  அதன் பின்னர், கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு பட்டியலிடப்படாமல் நிலுவையில் இருந்தது. 

இந்நிலையில் நான்காவது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சசிகலா சார்பில் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் முறையீடு ஒன்றை மேற்கொண்டார். அதில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இந்த வழக்கு விசாரிக்கப்படாமல் இருந்தால் அரசியல்  பாதிப்பு ஏற்பட்டுவிடும். எனவே, இந்த வழக்கை உடனே விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார். இதையடுத்து இந்த வழக்கு அடுத்த மாதம் 15ம் தேதி விசாரிக்கப்படும் என்று சிவில் நீதிமன்றம் அறிவித்துள்ளது. சிறையிலிருந்து விடுதலையாகி சசிகலா வெளிவந்துள்ள நிலையில் அதிமுகவின் பொதுக்குழுவை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த வழக்கு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!