தேர்தல் களத்துக்கு வரும் வைகோ மகன்... விளாத்திக்குளம் அல்லது கோவில்பட்டி தொகுதியில் போட்டி..?

By Asianet TamilFirst Published Feb 18, 2021, 9:24 AM IST
Highlights

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கோவில்பட்டி அல்லது விளாத்திக்குளம் தொகுதியில் போட்டியிடுவதற்கான பணிகளை மதிமுக தொடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

திமுக கூட்டணியில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திப்பது என்பதில் மதிமுக உறுதியாக உள்ளது. திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் மதிமுக தொகுதிகளை எதிர்பார்க்கிறது. மதிமுகவுடனான உறவை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் விரும்புவதால், இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்க ஸ்டாலின் இசைவு தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மதிமுகவுக்கு 10 - 12 தொகுதிகளை திமுக ஒதுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் இதைவிட அதிக தொகுதிகள் நமக்குக் கிடைக்காது என்பதை வைகோவும் உணர்ந்துள்ளார். அதனால்தான் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், ‘திமுக கூட்டணியில் அதிக தொகுதிகள் கிடைக்காது. என்னுடன் பயணிப்பவர்கள் எம்.எல்.ஏ., எம்.பி. ஆக முடியாது’ என்று வைகோ பேசி நிர்வாகிகளை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டார். இதற்கிடையே மதிமுக நிர்வாகிகள் சிலர், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று வைகோவிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.


அண்மையில் சென்னையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் துரை வையாபுரியைத் தேர்தலில் நிறுத்த வேண்டும் என்றும், அவருக்கு கட்சியில் இளைஞர் அணி தலைவர் பதவி அளிக்க வேண்டும் என்றும் நிர்வாகிகள் வலியுறுத்தி பேசியதாக தெரிகிறது. ஆனால், தன் குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று கடந்த காலங்களில் பேசியதை வைகோ குறிப்பிட்டு, அதற்கு மறுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், நிர்வாகிகள் தொடர்ந்து பேசி துரை வையாபுரியை தேர்தலில் நிறுத்த வைகோவிடம் அனுமதி பெற்றுள்ளதாக மதிமுக வட்டாரங்களில் பேசப்படுகின்றன.
எனவே திமுக உடனான  தொகுதி பங்கீட்டின்போது கோவில்பட்டி அல்லது விளாத்திக்குளம் ஆகிய தொகுதிகளில் ஒன்றை பெற்று, அந்தத் தொகுதியில் துரை வையாபுரியை நிறுத்தும் பணியை மதிமுக தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

click me!