இபிஎஸ் Vs ஓபிஎஸ்... அதிமுக தலைமை யாருக்கு ? 23 ஆம் தேதி கூடுகிறது பொதுக்குழு

By Ajmal KhanFirst Published Jun 2, 2022, 12:33 PM IST
Highlights

அதிமுகவில் ஒற்றை தலைமை என்கிற முழக்கம் எழுந்துள்ள நிலையில், வருகிற 26 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

அதிமுகவில் ஒற்றை தலைமையா?

சட்டமன்ற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தோல்வியின் காரணமாக அதிமுக தலைமை மீது தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.  இரட்டை தலைமையால் தான்  தோல்வி ஏற்பட்டுள்ளதாகவும் ஒற்றை  தலைமை தான் அதிமுகவிற்கு  தேவை என ஒரு  தரப்பினர் கூறி வருகின்றனர். இந்த நிலையில் சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என தேனி உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்க்கு அதிமுக தலைமை எந்த வித பதிலும் தெரிவிக்காமல் மவுனம் காத்தது. சசிகலாவோ விரைவில் தான் அதிமுக தலைமையை ஏற்பேன் என உறுதிபட கூறிவருகிறார். தொண்டர்கள் யாரும் தற்போது  ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ் பக்கம் இல்லை என்பதே உண்மை என கூறினார். எதிர்கட்சியாக இருக்கும் அதிமுக, மக்கள் பிரச்சனை எதற்குமே குரல் கொடுக்கவில்லை. ஆகவே மக்கள் என்னை தான் அதிமுகவிற்கு தலைமை ஏற்க வரவேண்டும் என்று கேட்டு வருவதாகவும் தெரிவித்தார்.  தொண்டர்கள் தான் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் தொண்டர்கள் யாரும் தற்போது ஓ.பி எஸ் ,ஈ.பி எஸ் பக்கம் இல்லை என கூறியிருந்தார்.

பொதுக்குழு தேதி அறிவிப்பு

இந்த பரபரப்பான சூழ்நிலையிலும் அதிமுக உட்கட்சி தேர்தல் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து  தற்போது அதிமுக பொதுக்குழு கூடுவதற்கான தேதியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளனர். அந்த அறிவிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 23.6.2022 வியாழக் கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், தற்காலிக கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எதிர்கட்சி யார்?

அவை தலைவராக இருந்த மதுசூதனன் உடல் நலக்குறைவு காரணமாக இறந்த நிலையில் தற்காலிக அவை தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அவைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறப்படுகிறது. மேலும் திமுக அரசிற்கு எதிராக பல்வேறு கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன, குறிப்பாக தாலிக்கு தங்கம் திட்டம், மடிக்கணிணி திட்டம், அம்மா உணவகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறுத்தியும் மாற்றியும் அமைக்கப்பட்டுள்ளதற்கு  கண்டனம் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் அதிமுக- திமுக என்கிற போட்டி தற்போது திமுக- பாஜக என மாறியுள்ளது. எனவே இது தொடர்பாகவும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் காரசாரமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படியுங்கள்

அதிமுகவை வீழ்த்த சதி.. அதிமுக பின்னுக்கு தள்ளப்படுவதாக மறைமுகப் பிரச்சாரம்.. பாஜக மீது பாய்ந்தாரா பொன்னையன்.??

 

click me!