
திமுக அரசுக்கு எதிராக பாஜக தீவிரமாக செயல்படத் தொடங்கியிருக்கிறது. திமுக அரசு மீது நாள் தோறும் விமர்சனக் கணைகளைத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடுத்து வருகிறார். அண்ணாமலைக்கு அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சேகர்பாபு, திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் பதில் அளித்து வருகிறார்கள். இதுவரை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அண்ணாமலை பெயரைக் கூட உச்சரித்தில்லை. சில தினங்களுக்கு முன்பு அண்ணாமலை அரசியல் செய்கிறார். நாங்கள் நல்லது செய்கிறோம் என்று திருச்சியில் பேட்டி அளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடியின் சென்னை விழாவில் பங்கேற்ற் முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழக அரசின் கோரிக்கைகளை முன் வைத்து பேசினார். பாஜகவினருக்குப் பிடிக்காத திராவிட மாடல், ஒன்றிய அரசு, ஒன்றிய அமைச்சர் போன்ற வார்த்தைகளையும் ஸ்டாலின் பயன்படுத்தியிருந்தார். இதனால், முதல்வர் ஸ்டாலின் மீது பாஜகவினர் விமர்சனங்களை முன் வைத்தனர். அப்படி விமர்சனங்களை பாஜக தலைவர் அண்ணாமலை முன் வைத்தபோது, ‘இன்னும் 15 நாட்களில் திமுக அமைச்சர்கள் மீது ஊழர் புகார்கள் வெளியிடப்படும். இதில் இரண்டு அமைச்சர்களின் பதவி பறிபோகும்’ என்று கூறி அண்ணாமலை அதிரடித்தார்.
இந்நிலையில் நேற்று திருச்சியில் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகம் இதுவரை காணாத ஊழலை இனி வரும் இரண்டு ஆண்டுகளில் காணப்போகிறது. திமுக அரசின் 2 துறைகளின் ஊழல் ஆதாரங்கள் வரும் 3 அல்லது 4-ம் தேதியில் வெளியிட இருக்கிறோம். அதைத் தொடர்ந்து வரிசையாக ஆதாரங்கள் வெளியிடப்படும். ஊழல் பட்டியலை வெளியிடுவதன் மூலம் திமுக ஆட்சியை கவிழ்ப்பது எங்களுடைய நோக்கம் கிடையாது. திமுக தலைமையிலான அரசு தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம்.” என்று தெரிவித்திருந்தார்.
ஜூன் 3-ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான மு. கருணாநிதியின் பிறந்த நாளாகும். அவருடைய பிறந்த நாளையொட்டி திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கருணாநிதி பிறந்த நாளிலேயே ஊழல் புகார்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிடக் கூடும் என்று அக்கட்சி வட்டாரங்கள் பேசப்படுகின்றன.