
கடந்த வாரம் சென்னையில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. மழைவிட்டும் வெள்ளநீர் வடியாத நிலை பல இடங்களில் இருக்கிறது.சென்னை மட்டுமில்லாமல், தமிழகம் முழுவதும் மீண்டும் கனமழை வர வாய்ப்பு உண்டு என்று ரெட் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண உதவிகள் செய்து வருகிறார்.நேற்று மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண திட்டங்களை அறிவித்தார்.
இதே போல, எதிர்க்கட்சியான அதிமுகவை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர். பார்வையிடுவதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் நிவாரணமும் வழங்கி வருகின்றனர். நேற்று டெல்டா மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பார்வையிட்டனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் கலந்துரையாடினர். நேற்று இரவு வி.கே.சசிகலாவின் சொந்த ஊரான ‘மன்னார்குடிக்கு’ வந்தார் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமியே நினைத்து பார்க்காத அளவுக்கு மாபெரும் உற்சாக வரவேற்பை கொடுத்தனர் அதிமுகவினர். நான் தான் அதிமுக பொது செயலாளர் என்று சொல்லி கொண்டிருக்கும் சசிகலாவின் சொந்த ஊரில், கெத்து காட்டி உள்ளார் எடப்பாடி பழனிசாமி. சசிகலா சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.அப்போது பெரிய அளவுக்கு எங்கும் கூட்டம் கூடவில்லை.இந்த நிலையில் தமிழகம் முழுவதும் எடப்பாடி எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதிலும் நேற்று மன்னார்குடியில் நடந்த வரவேற்பு ‘எடப்பாடி’ தான் அதிமுகவின் தலைமை என்று தொண்டர்கள் நினைத்ததே இதற்கு காரணம் என்று கூறுகின்றனர் அதிமுகவின் விசுவாசிகள்.