அதிமுகவில் இருந்து வந்த பிரச்சனை தேர்தல் ஆணையம் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
இனி கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கையில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட மாட்டார்கள் என நம்புகிறேன் என செம்மலை கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அறிவிக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி மனுதாக்கல் செய்தார். ஆனால், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்காமல் காலதாமதம் செய்து வந்தது. இதனையடுத்து, இபிஎஸ் தன்னை கட்சியின் பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் 10 நாட்களுக்குள் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் உத்தரவிட்டது.
இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதனை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கியும் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் கொண்டாடினர். குறிப்பாக சேலம் அண்ணா பூங்கா பகுதியில் அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை தலைமையில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து, அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- அதிமுகவில் இருந்து வந்த பிரச்சனை தேர்தல் ஆணையம் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இனி யாரும் கட்சியை சொந்தம் கொண்டாட முடியாது. அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்தினால், அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், அதிமுகவிற்கு இனிமேல் எந்த பிரச்சனையும் இல்லை உச்சநீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் ஆகியவை உறுதி செய்துவிட்டது. இனி கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கையில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட மாட்டார்கள் என நம்புகிறேன். அதிமுக எழுச்சியுடன் எல்லா தேர்தலையும் சந்தித்து வெற்றி வசாகைசூடும். 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல் அதிமுகவுக்கான தேர்தலாக அமையும் என செம்மலை கூறியுள்ளார்.