அதிமுகவினரின் சட்டபேரவை பேச்சை நேரலை செய்யாததற்கு கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த மானிய கோரிக்கை மீதான பதிலுரையை அதிமுகவினர் புறக்கணித்து வெளியேறினர்.
தமிழக சட்டப்பேரவை கூட்டம்
தமிழக சட்டப்பேரவை கூட்டமானது நிதிநிலை அறிக்கையோடு கடந்த மாதம் தொடங்கிய நிலையில் மானிய கோரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இறுதி நாளான இன்று காவல்துறை மானிய கோரிக்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை வழங்கினார். முன்னதாக தமிழக சட்டப்பேரவையில் காலையில் நடைபெறும் கேள்வி நேரம், முக்கிய தீர்மானங்கள், அமைச்சர்களின் பதிலுரையை நேரலை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் எதிர்கட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பேச்சு ஒளிபரப்பு செய்வதில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சை நேரலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால் இதனை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் சட்ட சபையில் இருந்து ஏற்கனவே அதிமுக வெளிநடப்பு செய்தது. தொடர்ந்து மானிய கோரிக்கையில் பதிலுரையாற்றும் அமைச்சர்களின் உரையை கேட்காமல் புறக்கணித்தது.
நேரலை செய்யாதது ஏன்.?
இந்தநிலையில் சட்டப்பேரவை கூட்டத்தின் இறுதி நாளான இன்று சட்டப்பேரவையில் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக சிறுவானிக்கு வரும் தண்ணீரை தடுக்கும் வகையில் கேரள அரசு அணை கட்டிவருவதாகவும் இதனை தடுக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்கு ஆன்லைன் முறையை ரத்து செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மின்வெளிகளால் காட்டு யானைகள் இருப்பதை தடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி கவனயீர்ப்பு தீர்மானத்தில் வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்ப பணித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் பதிலுரையை வழங்கினார்.
பதிலுரையை புறக்கணித்த அதிமுக
அப்போது அதிமுகவினர், சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் பேச்சை நேரலை செய்யப்படாததற்கு கண்டனம் தெரிவித்து குரல் எழுப்பினர். தொடர்ந்து அமளியிலும் ஈடுபட்டனர். இதனையடுத்து இடையில் குறிக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, ஜனநாயக முறைப்படி அனைவருக்கும் வாய்ப்பு வழங்கி வருகிறோம். அரசு ஒளிவு மறைவு இல்லாமல் இயங்கி வருகிறது, படிப்படியாக நேரடி ஒளிபரப்பு நடைபெறும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லையென தெரிவித்தார். இருந்த போதும் அதிமுகவினர் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
இதையும் படியுங்கள்
திமுகவின் திராவிட மாடல் என்பது பாஜகவின் தமிழ்நாட்டு மாடலா.?- தமிழக அரசுக்கு எதிராக சீறும் சீமான்