
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக சட்ட ஆலோசனைக் குழுவினர் இன்று சந்தித்து பேச இருப்பதாக வெளியான தகவல் வெளியாகி இருக்கிறது.
10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்துவது மற்றும் பல்வேறு வழக்குகளை போடுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் பாய்ந்து வருகின்றன. இதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனங்களை தெரிவித்தனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும், திமுகவினரின் தூண்டுதலாலும் பொய் வழக்குகள் தொடுக்கப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
அதோடு, அதிமுக மீது தொடுக்கப்படும் வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ள 6 பேர் கொண்ட சட்ட ஆலோசனை குழுவை அக்கட்சியின் தலைமை அமைத்தது. அந்தக் குழுவில், டி.ஜெயக்குமார், தளவாய் சுந்தரம், சி.வி.சண்முகம், மனோஜ் பாண்டியன், இன்பதுரை, மற்றும் பாபு முருகவேல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவனாது, அதிமுகவினர் மீது புனையப்படும் வழக்குகளுக்கான அனைத்து சட்ட உதவிகளையும் முழுமையாக செய்யும் என தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மோசடி புகார் வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அவர் தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை பிடிக்கத் தனிப்படைகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்த நிலையில், .தமிழக ஆளுநர் ரவியை இன்று அதிமுக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் சந்திக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பின் போது, பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் என்ன காரணத்திற்காக சந்திக்கப் போகிறார்கள் என்ற தகவல் உறுதிப்படுத்தப்படாத நிலையில், அதிமுக சட்ட நிபுணர் குழு ஆளுநரை சந்தித்து பேசுவது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.