
ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்களின் உயிரோடு விளையாடாமல் அரசியல் நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும் என டிடிவி. தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி.தினகரன்;- ஒமிக்ரான் நோய் தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது என சுகாதாரத்துறை அமைச்சர் சொல்லும் அதே நேரத்தில் கொரோனா பரவலை தடுக்க அறிவுரை வழங்க வேண்டிய தமிழக முதலமைச்சரே தஞ்சாவூர் திருச்சி போன்ற இடங்களில் ஆயிரக்கணக்கான மக்களை கூட்டி நிகழ்ச்சி நடத்துகிறார்.
ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்களின் உயிரோடு விளையாடாமல் அரசியல் நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். இந்த நேரத்தில் அரசியல் செய்யாமல் மக்களை உயிரை காப்பாற்ற வேண்டும். இது குறித்து நாங்கள் நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்வோம். மேலும் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் எதையெல்லாம் அவர் செய்தாரோ, அதையெல்லாம் தற்போது மு.க. ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார்.
தேர்தல் நேரத்தில் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி தங்க நகைக்கடனை அனைவருக்கும் தள்ளுபடி செய்ய வேண்டும். மக்களின் மறதியே திமுகவின் மூலதனம். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் கையெழுத்து போட்டவர் தான் தற்போதைய முதல்வர். திமுகவின் சுய ரூபம் தற்போதுதான் வெளிவர தொடங்கியுள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஓடி ஒளியக்கூடாது. வழக்கை சந்திப்பது தான் நல்ல அரசியல்வாதிக்கு அழகு என டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.
திமுக பிரதமர் மோடி எங்களுக்கு எதிரி இல்லை. விருந்தினராக வருபவருக்கு கறுப்புக்கொடி காட்ட வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளதைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. அன்றைக்கு, இதெல்லாம் தேவையில்லாத வேலை என்று சொன்ன எங்களைப் போன்றவர்களைப் பார்த்து பா.ஜ.க.வைக் கண்டு பயப்படுகிறார்கள்’என்று தி.மு.க.வினரும் அவர்களைச் சார்ந்தவர்களும் விமர்சித்தார்கள். அப்படியென்றால், இப்போது பா.ஜ.க.வையும், பிரதமர் மோடியையும் பார்த்து திமுக பயந்து நடுங்குகிறது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? விடியல் அரசின் சாயங்கள் ஒன்று ஒன்றாக வெளுத்து வருகிறது என டிடிவி. தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.