பாஜகவில் சேர்ந்துவிடுங்கள்..! அதிமுக மாஜிக்களுக்கு வலை வீசும் டெல்லி..!

By Selva KathirFirst Published Aug 10, 2021, 11:11 AM IST
Highlights

முதலமைச்சராக இருந்த இபிஎஸ் மகன், சம்பந்தி தொடங்கி பல்வேறு மாஜி அமைச்சர்களும் வருமான வரித்துறை சிக்கலில் தற்போது சிக்கியுள்ளனர். இதே போல் இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையும் களம் இறங்க உள்ளதாக கூறுகிறார்கள்.

அதிமுக மாஜிக்கள் பலரை பாஜகவில் இணைக்கும் முயற்சியில் அக்கட்சி மேலிடம் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

அடுத்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக தமிழகத்தில் வலுவாக காலூன்ற பாஜக ஆயத்தமாகி வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியின் போது திமுக மாஜிக்களை குறி வைத்து பாஜக இழுத்து வந்தது. வி.பி.துரைசாமி, கு.க.செல்வம் உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்தனர். இந்த நிலையில் ஆட்சி மாறிய நிலையில் ஆளும் கட்சியாக உள்ள திமுகவில் இருந்து யாரும் பாஜக பக்கம் வர ஆர்வம் காட்டவில்லை. அதே சமயம் களப்பணியாளர்கள் பாஜகவிற்கு தேவை என்று மேலிடம் கருதுகிறது. அதிலும் அதிமுக மாஜிக்கள் என்றால் பணபலம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

எனவே அதிமுகவில் மாஜி அமைச்சர்களை பாஜகவில் இணைக்கும் பணிகள் துவங்கியுள்ளதாக சொல்கிறார்கள். நேற்று முன் தினம் டெல்லி சென்றுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. அவர் கட்சிக்கு வந்தால் வரவேற்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளிப்படையாகவே கூறியுள்ளார். இதன் மூலம் பாஜக கூட்டணிக்கட்சி என்று எல்லாம் பார்க்காது, அதிமுக மாஜிக்கள் இணையத் தயார் என்றால் பாஜகவில் இணைத்துக் கொள்ள முன்வரும் என்கிறார்கள்.

இதனிடையே அதிமுக மாஜிக்கள் பலருக்கு வருமான வரித்துறையிடம் இருந்து சம்மன் சென்றுள்ளது. முதலமைச்சராக இருந்த இபிஎஸ் மகன், சம்பந்தி தொடங்கி பல்வேறு மாஜி அமைச்சர்களும் வருமான வரித்துறை சிக்கலில் தற்போது சிக்கியுள்ளனர். இதே போல் இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையும் களம் இறங்க உள்ளதாக கூறுகிறார்கள். அதிமுக மாஜிக்கள் விஜயபாஸ்கர், காமராஜ், நத்தம் விஸ்வநாதன் மட்டும் அல்லாமல் சுமார் 10 பேர் வருமான வரித்துறை வலையில் சிக்கியுள்ளதாக சொல்கிறார்கள். இவை அனைத்துமே மாஜிக்களை பாஜக பக்கம் நகர்த்துவதற்கான வியூகம் என்கிறார்கள். மேற்கு வங்கத்தில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை மூலமாகவே திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பலரை தங்கள் பக்கம் இழுத்தது பாஜக.

அதே பாணியில் இங்கு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை நெருக்கடியில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் பாஜக பக்கம் வந்துவிடுங்கள் என்று தெரிவிப்பதற்காகவே தற்போது மாஜிக்களுக்கு சம்மன் சென்றுள்ளதாக கூறுகிறார்கள். அதனை அதிமுக மாஜிக்கள் எப்படி எதிர்கொள்ள உள்ளனர் என்பதை பொறுத்து தான் பாஜக மேலிடத்தின் திட்டம் வெற்றி பெறுமா என்பது தெரிய வரும்.

click me!