ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏவான ஆர்.வைத்திலிங்கம் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் தினகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இன்று தஞ்சாவூரில் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏவான ஆர்.வைத்திலிங்கம் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் தினகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய டிடிவி தினகரன், “அமமுக சார்பில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சிலரின் சுயநலப்போக்கால், ஆதிக்க மனப்பான்மையால், பேராசையால், ஜெயலலிதாவின் இயக்கத்தை விட்டு கனத்த இதயத்தோடு நாங்கள் பிரிந்து, அமமுகவைத் தொடங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டோம். 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மேடையில் அதிமுக - அமமுக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்தித்து மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த வைத்திலிங்கத்துக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஜெயலலிதாவின் தொண்டர்களாக, நிர்வாகிகளாக 30 ஆண்டுகளாக இந்த இயக்கத்தில் பணியாற்றியவர்கள் எல்லாம், இன்று ஒரு சிலரின் சுயநலத்தால், பணத்திமிரால், பேராசையால் பிரிந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எங்களுக்குள் இருந்த நட்பு உங்களுக்குத் தெரியும். விதி வசத்தால், காலத்தின் கட்டாயத்தால் நாங்கள் பிரிந்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தாலும், எங்களுக்குள்ள அன்பும், நட்பும் தொடர்ந்து வந்தது.
இதையும் படிங்க..இனிமே பெங்களூரு டூ சென்னைக்கு செல்ல 2 மணி நேரம் போதும்.. வந்தே பாரத் ரயிலை மிஞ்சும் வேகம் !!
அதனால்தான் பிரச்சினைகள் இல்லாமல் விட்டுக்கொடுத்து, இணைந்து பணியாற்றிய, ஜெயலலிதாவின் ஆட்சியைத் தமிழகத்தில் கொண்டு வருவதற்கு அமமுக-அதிமுக இணைந்துள்ளது. எனவே, இயற்கையாக இணைந்த இந்த இணைப்பால் துரோகிகளுக்குப் பாடம் புகட்டி, தீய சக்தியான திமுகவை ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்ற நாங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவோம்” என்று எடப்பாடி தரப்பை கடுமையாக விமர்சித்து பேசினார் டிடிவி தினகரன்.
அடுத்து பேசிய ஓ.பன்னீர்செல்வம் பேசியது, “எம்ஜிஆருக்கு பிடித்த 7 ஆம் தேதி இன்று. ஒரு குடும்பத்தில் இரு சகோதரர்களுக்கிடையே சிறு மனஸ்தாபங்கள் இருந்தாலும், இங்கு நாமெல்லாம் ஒன்றாகக் கூடியிருக்கின்றோம் என்றால், வைத்திலிங்கத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் தூய தொண்டர்களின் ஆழமான எண்ணங்களிலேயே, நாம் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்ற ஆசைதான் உள்ளது. நாம் அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்று சேர்ந்து இயக்கத்தை வழிநடத்த வேண்டும்.
அனைவருக்கும் நிறைவானதாக இருக்க வேண்டும் என்றுதான் எம்ஜிஆர், ஜெயலலிதா இந்த இயக்கத்தைத் தொடங்கி வழிநடத்தினார்கள். ஆனால் இன்றைக்கு மாறுபட்டிருக்கிறது. மீண்டும் அந்தச் சூழ்நிலை வருமோ ? வராதோ ? என்று பொது மக்கள் கவலையில் உள்ளனர். நாங்கள் செல்கின்ற இடங்களில் எல்லாம் நீங்கள் இந்த இயக்கத்தை ஒருங்கிணைக்க வேண்டும் என சொல்கிறார்கள். எனவே, நாம் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் தான் நமக்கு இருக்க வேண்டும். அதற்கான பிள்ளையார் சூழி இங்கு போடப்பட்டிருக்கிறது.
எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் தஞ்சாவூரிலிருந்து தொடங்கினால், அது வெற்றி அடையும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து நின்று அரசியல் களத்தில் விளையாடும்போது, நம்மை எதிர்த்து விளையாடும் தகுதி தமிழகத்தில் மட்டுமில்லை, இந்தியாவிலேயே யாருக்கும் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்” என்று பேசினார் ஓபிஎஸ்.
திருமணம் முடிந்த பிறகு ஜே.சி.டி., பிரபாகரன், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் விஐபி சாப்பிடும் இடத்துக்கு வர, அந்த இடமே பரபரப்பானது. ஒவ்வொரு வாழை இலையும் பெரிதாக வைக்கப்பட, டிடிவி தினகரன் பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்ட ஓ.பன்னீர்செல்வம் தனது வாழை இலையை பாதியாக மடக்கி விட, அதில் சாப்பாடு சாப்பிட்டார்.
இவங்க இரண்டு பெரும் இந்த அளவுக்கு ஒற்றுமையாயிடுவாங்கன்னு தெரியாம போச்சே !!, பிரிந்து இருந்த டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் இருவரும் ஒருவருக்கொருவரை விட்டுக்கொடுக்காம பேசுறாங்களே !! என்று ரத்தத்தின் ரத்தங்கள் பேசிவிட்டு சென்றனர். ஒட்டுமொத்தத்தில் அதிமுகவை கைப்பற்றும் நோக்கத்தில் தஞ்சாவூரில் பிள்ளையார் சுழி போட்டுள்ளனர் என்று தான் கூற வேண்டும்.
இதையும் படிங்க..iPhone 11 வெறும் ரூ.8,950க்கு கிடைக்கிறது! இதை விட்டா வேற சான்ஸ் கிடைக்காது - முழு விபரம் !!