தயங்கும் தேமுதிக... தவிக்கும் அதிமுக... கூட்டணி இழுபறியால் தொடரும் குழப்பம்!

By Asianet TamilFirst Published Feb 25, 2019, 2:59 PM IST
Highlights

அதிமுக கூட்டணியில் சேர்வது பற்றி தேமுதிக எந்த முடிவையும் அறிவிக்காததால், கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் அதிமுக தவித்து வருகிறது.

அதிமுக கூட்டணியில் சேர்வது பற்றி தேமுதிக எந்த முடிவையும் அறிவிக்காததால், கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் அதிமுக தவித்து வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அணியில் பாமகவுக்கு 7+1 தொகுதிகளும் பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக கூட்டணியில் தேமுதிகவும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தக் கட்சியுடன் பாஜக சார்பிலும் அதிமுக சார்பிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில் தேமுதிகவுக்கு 3 தொகுதிகள் கொடுப்பதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதை ஏற்க தேமுதிக மறுத்து விட்டது. 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் தேமுதிகதான் அதிக தொகுதிகளில் போட்டியிட்டது. அந்தக் கூட்டணியில் இடம் பிடித்திருந்த பாமக, தேமுதிகவைவிட குறைந்த தொகுதிகளில் போட்டியிட்டது. இதனால், பாமகவைவிட தாங்கள் குறைந்தவர்கள் அல்ல; அந்தக் கட்சிக்கு ஒதுக்கியதைவிட அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தக் கோரிக்கையை அதிமுக ஏற்க மறுத்துவிட்டது. இதன் காரணமாக அதிமுக-தேமுதிக கூட்டணி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. 

பாமகவைவிட குறைந்த தொகுதிகளைப் பெற முடியாது எனத் திட்டவட்டமாக அதிமுகவிடம் தேமுதிக தெரிவித்துவிட்ட நிலையில், அக்கட்சி சார்பில் 40 தொகுதிகளில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறும் பணியும் தொடங்கியுள்ளது. இதனால், அதிமுக தரப்பு குழம்பி போய் இருக்கிறது. அதே வேளையில், அதிமுக சார்பில் விஜயகாந்திடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்துவருவதாக எல்லா அமைச்சர்களும் சொல்லி வைத்தார்போல பேசிவருகிறார்கள்.  

ஆனால், கேட்ட தொகுதிகள் கிடைத்தால் மட்டுமே அதிமுக கூட்டணியில் இடம்பெறுவோம்; 21 தொகுதிகளில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று  தேமுதிக தரப்பில் மீண்டும் அழுத்தம் திருத்தமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக ஜெயலலிதாவின் பிறந்த நாளான நேற்றே தொகுதி பங்கீட்டை முடித்து, கூட்டணியை முறையாக அறிவிக்க அதிமுக தலைமை முடிவு செய்திருந்தது. ஆனால், தேமுதிகவுடனான கூட்டணி இறுது செய்யப்படாததால், கூட்டணியை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுவருகிறது. மேலும் பாமக மற்றும் பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஓரளவுக்கு இறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், தேமுதிக அதிமுக கூட்டணிக்கு வந்தாலும் தொகுதி ஒதுக்கீட்டில் சலசலப்பு ஏற்படும் என்ற அச்சமும அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. 

இதற்கிடையே திமுக தலைவர் ஸ்டாலினும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரும் விஜயகாந்தைச் சந்தித்து பேசியதில் அரசியல் உண்டு என்று பிரேமலதா கூறியதால், அதிமுக தரப்பு ஆடிபோய் உள்ளது.

click me!