2 ஆயிரம் உதவி தொகை லிஸ்டில் பெயர் விட்டுப்போச்சா..? கடுப்பானவர்களுக்கு எடப்பாடியின் இனிப்பான அறிவிப்பு..!

By Thiraviaraj RMFirst Published Feb 25, 2019, 2:50 PM IST
Highlights

தமிழகத்தில் அனைத்து ஏழை தொழிலாளர்களுக்கும் ரூ.2000 உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
 

தமிழகத்தில் அனைத்து ஏழை தொழிலாளர்களுக்கும் ரூ.2000 உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

தமிழக அரசின் சார்பாக 60 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். ஆனால், பலரது பெயரும் அந்த லிஸ்டில் இடம்பெறாததால் ஏழைத் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த உதவித் தொகையை பெற யாரை அணுகுவது எனத் தெரியாமல் குழப்பம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து சேலத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி,’’ சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டொன்றுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை கொடுத்து முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம், அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தப்படுகின்ற செய்தியை சொல்லி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்த திட்டம் உன்னதமானது. தமிழகத்தில் மட்டும் சுமார் 60 லட்சம் சிறு, குறு விவசாயிகள் பயன்பெறுகிறார்கள். இந்தியா முழுவதும் 12 கோடி சிறு, குறு விவசாயிகள் பயன் அடைகின்றனர். இது ஒரு வருடம் கொடுப்பது மட்டுமல்ல. இது தொடர்ந்து 5 ஆண்டு காலம் வழங்கப்படும் திட்டம். 4 மாத காலத்திற்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம். இப்படி 3 தவணையாக ஒவ்வொரு ஆண்டும் ரூ.6 ஆயிரம் விவசாயினுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

தமிழகத்தில் இருக்கக்கூடிய சிறு, குறு விவசாயிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமான திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்திருக்கின்றார். இதற்காக தமிழக மக்கள், விவசாயிகளின் சார்பாக நன்றியை பிரதமருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் அனைத்து ஏழை தொழிலாளர்களுக்கும் சிறப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வழங்கி இருக்கிறேன். இது அனைத்து ஏழை தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும். என்னிடத்திலேயே கோரிக்கை மனு கொடுத்தார்கள். நிறைய பேர் பெயர் விடுபட்டு விட்டது. இந்த சிறப்பு உதவித் தொகை திட்டத்தில் எங்களுடைய பெயர் இடம்பெறவில்லை என கோரிக்கை மனு அளித்தார்கள்.

இங்கு வந்திருக்கின்ற அரசு கூடுதல் செயலாளர் ஹன்ஸ்ராஜியிடம் இது பற்றி எடுத்துச் சொல்லி எந்த ஒரு ஏழை தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்த பெயர்களும் விடுப்படக்கூடாது அனைவருக்கும் வழங்க வேண்டும்’’ என அவர் தெரிவித்தார். 
இவ்வாறு அவர் பேசினார்.

click me!