அவர் இப்படி பேசுவார் என்று கனவில் கூட நினைக்கல... உருக்கமாக பேசிய அன்புமணி!!

By sathish kFirst Published Feb 25, 2019, 2:34 PM IST
Highlights

ஒரு சீட்டுக்காக 30 ஆண்டுகால உறவு, பந்த பாசத்தை விட்டுக்கொடுப்பார் என்று கனவில்கூட நினைக்கவில்லை என்று  நமது மைத்துனரும் 32 ஆண்டுகால நண்பருமான விஷ்ணு பிரசாத் மீது வருத்தமாக பேசியிருக்கிறார் அன்புமணி.

அதிமுகவை மிகக் கேவலமான வார்த்தைகளால் அர்ச்சித்த ராமதாஸ் மற்றும் அன்புமணி  வெட்கம் கெட்டவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மேலும், தற்போது நோட்டுகளை வீசி கூட்டணி உருவாவதால் இதை பாமக பார்முலா என்று சொல்லத் தோன்றுகிறது. இந்த பார்முலாதான் அதிமுக - பாமக கூட்டணியின் பின்னணியில் இருக்கிறது. மேலும் மெரிட் இல்லாமல் பேமன்ட் கோட்டாவில் கூட்டணி உருவாக்கியுள்ளது. இதைத் தவிர்த்து 10 கோரிக்கையின் அடிப்படையில் கூட்டணி வைத்துள்ள ராமதாஸ் 11வது கோரிக்கையாக பேரம் பேசியது தொடர்பாக தெரிவித்திருந்தால் ஆரோக்கியமானதாக இருந்திருக்கும் என்று அன்புமணியின் நண்பரும் மைத்துனருமான விஷ்ணு பிரசாத் அதிமுக - பாமக கூட்டணி குறித்து தாறுமாறாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் இன்று அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்? விமர்சனத்திற்கு பதிலடி என்ன பதில் என சென்னை தி.நகரில் அன்புமணி  செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், விஷ்ணு பிரசாத் எங்கள் மீது சமீபத்தில் விமர்சனம் செய்தார். அவருடைய விமர்சனத்தால் எங்கள் கட்சிக்கோ, எங்களுடைய கூட்டணிக்கோ எந்த ஒரு எள்ளவும் பாதிப்பு வரப்போவது கிடையாது. ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய மனஉளைச்சல், பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

விஷ்ணு பிரசாத்தை 32 ஆண்டுகளாக எனக்கு நண்பர். என்னுடன் கல்லூரியில் படித்தவர். 28 ஆண்டுகளாக என்னுடைய மைத்துனராக இருக்கிறார். என்னுடைய 3 மகள்களை அவருடைய மடியில்தான் உட்கார வைத்து முடி எடுத்தோம். காதணி விழா நடத்தினோம். இப்படி அவர் விமர்சனம் செய்வார் என்று கனவில் கூட நினைக்கல. இது எனக்கு மட்டுமல்ல, என்னுடைய மனைவிக்கும் மனவருத்தம் தான். 

இதற்கு என்ன காரணம். பொதுவாக  கலைஞர் இருந்த காலத்தில் எங்களை எதிர்க்க வேண்டும், விமர்சனம் செய்ய வேண்டும் என்றால் துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோரை வைத்துதான் அறிக்கை விடுவார்கள். இது எல்லோருக்கம் தெரியும். ஆனால் இப்போது ஸ்டாலின் ஒரு படி மேலே சென்று எங்கள் உறவினர்களை வைத்து எங்கள் மீது அவதுறுகளை, விமர்சனங்களை செய்ய வைத்திருக்கிறார் என நினைக்கிறேன். 

ஆனாலும் நாங்கள் அவரைப் பற்றி எந்த விமர்சனமும் வைக்கப்போவது கிடையாது. பொதுவாக விசிக தலைவர் திருமாவளவன் எங்களை விமர்சித்தால்தான் அவருக்கு அரசியல். எங்களை கடுமையாக எதிர்த்தால்தான் அவருக்கு சீட்டு. ஒருவேளை விஷ்ணு பிரசாத்தும் அப்படி நினைத்துக்கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். எங்களை விமர்சனம் செய்தால் அவருக்கு ஒரு சீட்டு கிடைக்கலாம். ஆனால் ஒரு சீட்டுக்காக 30 ஆண்டுகால உறவு, பந்த பாசத்தை விட்டுக்கொடுப்பார் என்று கனவில்கூட நினைக்கவில்லை என்று  கூறினார். 

click me!