வீட்டை மட்டுமல்ல,அரசியல் கட்சியையும் யாராலும் அடாவடியாக அபகரிக்க முடியாது...! இனி வசந்த காலம் தான் - ஓபிஎஸ்

By Ajmal Khan  |  First Published Aug 17, 2022, 2:02 PM IST

அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல, அரசியல் கட்சியையும் யாரும் அடாவடியாக, சட்டத்திற்குப் புறம்பாக அபகரிப்பதை நீதியும், தர்மமும், தொண்டர்களும், பொதுமக்களும், குறிப்பாக தெய்வமும் ஏற்றுக்கொள்ளாது என்பதை இன்றைய தீர்ப்பு மெய்ப்பித்து இருக்கிறது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்
 


வீட்டையும், கட்சியையும் அபகரிக்க முடியாது

ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்மத்தை நம்பினேன்; மாட்சிமைமிக்க நீதிமன்றங்களை நம்பினேன்; கழகத்தை உயிராக நேசிக்கும் கழகக் கண்மணிகளை, தொண்டர்களை நம்பினேன், உண்மையும், தர்மமும் என் பக்கம்தான் இருக்கிறது என்பதை உளமார நம்பிய தமிழ்நாட்டு மக்களை நம்பினேன்; இவையாவிற்கும் மேலாக, தமிழ்நாட்டு மக்களுக்காக இந்த அப்பழுக்கில்லாத இயக்கத்தை தோற்றுவித்து, வளர்த்தெடுத்து, பாதுகாத்து, தங்களது ஆயுளையே அர்ப்பணித்த இயக்கத்தின் காவல் தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது ஆசிகளை நம்பினேன். இந்த நம்பிக்கை இன்றைக்கு உண்மையாகி இருக்கிறது. அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல, அரசியல் கட்சியையும் யாரும் அடாவடியாக, சட்டத்திற்குப் புறம்பாக அபகரிப்பதை நீதியும், தர்மமும், தொண்டர்களும், பொதுமக்களும், குறிப்பாக தெய்வமும் ஏற்றுக்கொள்ளாது என்பதை இன்றைய தீர்ப்பு மெய்ப்பித்து இருக்கிறது. 

Tap to resize

Latest Videos

இபிஎஸ் பொதுச்செயலாளர் ஆனது செல்லாது...! அதிர்ச்சி அளித்த உயர்நீதிமன்றம்... உற்சாகத்தில் ஓபிஎஸ்

வசந்த காலமாக மாறும்

கழக நிறுவனர் புரட்சித் தலைவர் அவர்கள் வகுத்தெடுத்த விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இனி, கழகத்தின் ஒற்றுமை நிலைநிறுத்தப்பட்டு, அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திகழும், வெற்றி நடைபோடும் என்பது திண்ணம். "தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே" என்னும் மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருமந்திரத்தை இதயப்பூர்வமாக ஏற்று, கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளர் என்றைக்கும் நம் இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள்தான் என்னும் உணர்வு கொண்ட ஒன்றரை கோடி தொண்டர்களையும் அரவணைத்துச் செல்வேன். கழகத்தின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும். அண்ணா நாமம் வாழ்க! புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க! புரட்சித் தலைவி அம்மா நாம் வாழ்க! என ஓபிஎஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தான்..! உற்சாகத்தில் ஆதரவாளர்கள்.. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன..?

 

click me!