தமிழகத்தில் எதிர்கட்சியாக செயல்படுவது யார்? பாஜக நிர்வாகியின் பேச்சுக்கு ஓபிஎஸ் பதிலடி

By Ajmal KhanFirst Published Jun 12, 2022, 10:04 AM IST
Highlights

தமிழகத்தில் பாஜக தான் எதிர்கட்சியாக செயல்பட்டு வருவதாக பாஜக கூறிவரும் நிலையில், அதிமுக தான் எதிர்கட்சியென்றும் மக்கள் பிரச்சனைகள் அனைத்திலும் அதிமுக குரல் கொடுத்திருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
 

அதிமுக தான் எதிர்கட்சி

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில், திமுக அரசின் செயல்பாடுகளை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் எதிர்கட்சியாக பாஜக செயல்படுவதாகவும் அதிமுக எதிர்கட்சி செல்பாடுகளில் தோல்வி அடைந்துள்ளதாக விமர்சிக்கப்பட்டது. இந்தநிலையில் இதற்க்கு பதில் அளிக்கும் வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பிரதான எதிர்க்கட்சியாக விளங்குவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே என தெரிவித்துள்ளார்.  "ஆளும் கட்சியில் வளரும் சர்வாதிகாரத்தை கண்டிப்பது ஆளும் கட்சி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை அம்பலப்படுத்துவது; ஆளும் கட்சியின் அமுலில் ஏற்படும் அல்லல் அவதியை எடுத்துக்காட்டுவது; ஆளும் கட்சியின் சட்டதிட்டங்களும், நிர்வாக முறைகளும் ஏழைகளை எவ்விதத்தில் கெடுக்கிறது என்பதை எடுத்துரைப்பது; ஆளும் கட்சி என்னென்ன விதமான இதமளிக்கும் சட்டம் செய்திருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுவது; உரிமையையும், உடமையையும் பறிகொடுக்கும் போக்கில் ஆளும் கட்சி நடந்து கொள்ளும்போது கண்டிப்பது, எதிர்த்து கிளர்ச்சி நடத்துவது போன்றவைதான் எதிர்கட்சிக்கு இருக்க வேண்டிய இலட்சணங்கள்" என பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியிருக்கிறார். பேரறிஞர் அண்ணா அவர்களின் கூற்றுக்கு ஏற்ப, கடந்த ஓராண்டு காலமாக சிறந்த எதிர்க்கட்சியாக சட்டமன்றத்திலும், சட்டமன்றத்திற்கு வெளியிலேயும் இயங்கிக் கொண்டிருக்கும் இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கம். உண்மை நிலை இவ்வாறிருக்க, எதிர்க்கட்சி செயல்பாடுகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பின்தங்கி இருப்பது போன்ற மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டு, சமீப காலமாக அதுகுறித்த விவாதங்கள் ஊடகங்களில் நடைபெற்று வருகின்றன. இந்தத் தருணத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்றத்திற்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, மிகச் சிறந்த எதிர்க்கட்சியாக, பிராதன எதிர்க்கட்சியாக, மக்களின் குறைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அவற்றிற்கு தீர்வு காணும் மாபெரும் மக்கள் இயக்கமாக செயல்படுகிறது என்பதை சில முக்கிய எடுத்துக்காட்டுக்களுடன் சுட்டிக்காட்ட நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

திமுக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்

1. நோய்த் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த களப் பணியாளர்களை மாற்றுமாறு சென்னை மாநகராட்சி அதிகாரிகளை தி.மு.க.வினர் மிரட்டியபோது, அதனைக் கண்டித்து 24-05-2021 அன்று நான் அறிக்கை வெளியிட்டேன். இதனைத் தொடர்ந்து களப் பணியாளர்களை மாற்றுவது தடுத்து நிறுத்தப்பட்டது. 2.ஆசிரியர் தேர்வு வாரியத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் இணைக்க தி.மு.க. அரசு முடிவெடுத்தபோது, அதனைக் கண்டித்து 02-06-2021 அன்று நான் அறிக்கை விடுத்ததோடு, அதில் ஏதாவது பிரச்சனைகள் இருந்தால், அவற்றை போக்கி சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற வேண்டுகோளையும் விடுத்தேன். இதன் காரணமாக, ஆசிரியர் தேர்வு வாரியம் இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை கிண்டிக்கு மாற்றப்பட இருப்பதாகவும், அந்தக் கட்டடம் மீண்டும் சட்டமன்றமாக மாற்றியமைக்கப்படும் என்ற செய்தி வெளிவந்தவுடன் அதனைக் கண்டித்து 11-06-2021 அன்று நான் அறிக்கை வெளியிட்டதோடு இந்த முடிவை கைவிட வேண்டுமென்று வலியுறுத்தினேன். இன்றளவிலும் ஓமந்தூரார் மருத்துவமனை மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.4.கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு குறைந்தபட்ச உதவி கிடைக்கும் வகையில் புதிய வழிமுறைகளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வகுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோது, அனைத்து குடும்பங்களும் நிவாரணம் பெறும் வகையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறப்புச் சான்றிதழ்களில் இருக்கும் தவறினை சரி செய்யுமாறு 02-07-2021 அன்று நான் அறிக்கை வெளியிட்டு இருந்தேன். இது மட்டுமல்லாமல் 30-05-2021 அன்றே கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க ஒரே மாதிரியான முடிவை எடுக்குமாறு மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். தமிழ்நாடு அரசு கூட இதுபோன்ற வேண்டுகோளை விடுக்கவில்லை என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இன்றைக்கு, கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள்– குடும்பங்களுக்கு 50,000 ரூபாய் நிதி வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. 5.ஏழாண்டுகள் மட்டுமே செல்லுபடியாகக்கூடிய ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என்று மத்திய அரசு அறிவித்தோடு புதிய சான்றிதழ்களை வழங்குமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது. இதில் காலதாமதம் ஏற்பட்டபோது, அதனை வலியுறுத்தி நான் 14-07-2021 அன்று நான் அறிக்கை வெளியிட்டேன். இதனையடுத்து, புதிய சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இது போன்று மக்கள் பிரச்சனைகளில் அதிமுகவின் செயல்பாடுகள் தொடர்பாக நீண்ட பட்டியலையிம் அவர் வெளியிட்டுள்ளார்.

மீண்டும் அதிமுக ஆட்சி

எங்களைப் பொறுத்தவரை, ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான பணிகளை மேற்கொள்ளுதல்; எதிர்க்கட்சியாக இருந்தால் ஆளும் கட்சியினரின் மக்கள் விரோதப் போக்கினை சுட்டிக்காட்டுதல், இதுதான் மாண்புமிகு அம்மா அவர்கள் எங்களுக்கு சொல்லிக் கொடுத்த பாடம். ஓராண்டு கால தி.மு.க. ஆட்சியின் அவல நிலையையும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்பாடுகளையும் வைத்தே தமிழ்நாட்டில் அடுத்த ஆட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிதான் என்பதை அறுதியிட்டு உறுதியாக என்னால் சொல்ல முடியும். தி.மு.க. அரசைப் பொறுத்தவரை, மக்கள் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்காமல், மதம் சார்ந்த விஷயங்களில் மூக்கை நுழைத்து பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை தி.மு.க. அரசு நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில், இதுவே ஆட்சியை அழிக்கும் ஆயுதமாகிவிடும் என ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

அதிமுக பஞ்சத்திற்கு திருடர்கள்.. திமுக பரம்பரை திருடர்கள்.. 2 திராவிட கட்சிகளையும் வம்புக்கு இழுக்கும் சீமான்

click me!