அதிமுகவின் சறுக்கல்களுக்கு பாஜகவுடன் காட்டும் நெருக்கமே காரணம்... அடித்துச் சொல்லும் கே.எஸ்.அழகிரி..!

By Thiraviaraj RMFirst Published Dec 19, 2021, 2:30 PM IST
Highlights

அதிமுக அவர்களை எதிர்த்துப் போராடாமல்,சிறப்பாக செயல்பட்டு வரும் திமுகவை எதிர்த்து போராடுகிறது. 

அதிமுகவின் சறுக்கல்களுக்கு பாஜக உடன் அவர்கள் காட்டும் நெருக்கமே காரணம் என்று  கே.எஸ்.அழகிரி பேட்டியளித்துள்ளார்.

 திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, பாஜகவை எதிர்த்து அதிமுக போராட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

ரூ.35க்கு விற்க வேண்டிய பெட்ரோலை ரூ.100க்கு விற்கிறார்கள். இதற்கு காரணம் மத்திய அரசு, ஆனால், அதிமுக அவர்களை எதிர்த்துப் போராடாமல்,சிறப்பாக செயல்பட்டு வரும் திமுகவை எதிர்த்து போராடுகிறது. அதிமுக நடத்திய போராட்டத்தில் அரசியல் இருக்கிறதே தவிர வேறொன்றும் இல்லை.வாரணாசியில் ரூ.800 கோடி மதிப்பிலான 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் நடைபெற்ற காசி விஸ்வநாதர் கோயிலின் முடிவடையாத புனரமைப்புப் பணியை பிரதமர் மோடி திறந்து வைத்திருக்கிறார். இந்த விழாவில் பேசிய அவர், ஒளரங்கசீப் படையெடுக்கும் போதெல்லாம், மராத்திய மன்னர் சிவாஜி வீறுகொண்டு எழுந்து இந்துக்களைப் பாதுகாத்ததாகப் பேசி, இந்து-முஸ்லிம் மக்களிடையே மோதலை விதைத்திருக்கிறார்.

உத்தரப் பிரதேச தேர்தலை மனதில் வைத்து, கடந்த ஒரு மாதமாக முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், பாஜக தலைவர்களும், இந்துத்துவா தலைவர்களும் முஸ்லிம்களையும் இந்துக்களையும் பிளவுபடுத்தும் நடவடிக்கையைத் தொடங்கிவிட்டனர். அதன் உச்சகட்டமாக, பிரதமரின் இந்த மத துவேஷப் பேச்சு அமைந்திருக்கிறது.

ஒளரங்கசீப் இந்தியாவில், மோடி பிறந்த குஜராத்தில் பிறந்து, வளர்ந்து, மறைந்தவர். அவரை வெளிநாட்டிலிருந்து வந்த படையெடுப்பாளர் எனக் கூறுவது விஷமத்தனமானது என்று வரலாற்று ஆய்வாளர்கள் விமர்சித்துள்ளனர். இவரது பெயரை இப்போது குறிப்பிட்டு, இந்து - முஸ்லிம்களுக்கிடையே பகைமையை ஏற்படுத்துவது நியாயமா? என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பியிருக்கிறார்கள்.

இந்த அரசு விழாவில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு தலைவராகப் போட்டுள்ளனர். அரசியல் சாசனத்துக்கு எதிராக, அரசியலையும் மதத்தையும் கலந்து மதவெறி அரசியலுக்கு இந்த அரசு நிகழ்ச்சியை மோடி பயன்படுத்தியிருக்கிறார். மதச்சார்பின்மை கொள்கையுடைய நாட்டில் இதைத்தான் மதவாதம் என்று சொல்கிறோம்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ராகுல் காந்தி உரையாற்றும் போது, 'இந்து என்பவர் யார்? இந்துத்துவாவாதி என்பவர் யார்? மகாத்மா காந்தி ஒரு இந்து. நாதுராம் கோட்சே ஒரு இந்துத்துவாவாதி' என்பதை வேறுபடுத்தி, தெளிவுபடுத்தினார். அரசியலில் மதத்தைக் கலந்தால் என்ன விளைவுகள் ஏற்படுமோ, அதை ராகுல் காந்தி மிகுந்த தீர்க்க தரிசனத்தோடு வெளிப்படுத்தியிருக்கிறார்.

காசி விஸ்வநாதர் கோயில் இந்துக்களின் புனிதத் தலம் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. அதைப் புனரமைப்பதும் தவறில்லை. அதனை அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்துவது தவறு. உத்தரப் பிரதேசத்தில் இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் ஜாட் சமுதாய விவசாயிகள் ஓரணியில் திரண்டு மோடியை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவே மூன்று வேளாண் சட்டங்களை மோடி திரும்பப் பெறக் காரணமாக அமைந்தது. விவசாயிகளின் அதிருப்தியால் ஏற்படப்போகும் இழப்பை சரிகட்ட மத துவேஷத்தை மோடி கட்டவிழ்த்துவிட்டிருப்பது, அவர் வகிக்கும் பிரதமர் பதவிக்கு அழகல்ல.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் காலம் தாழ்த்தியதால், 700 விவசாயிகள் உயிரிழந்தார்கள். ஓராண்டு காலமாக அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்ததைப் பற்றி எல்லாம் மோடிக்குக் கவலையில்லை. விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாத மோடி, மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்துவது அப்பட்டமான அரசியல் ஆதாய நடவடிக்கையாகும். வேலை இல்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, குறைந்தபட்ச ஆதார விலை விவகாரம், தானியங்களின் ஏகபோகக் கொள்முதலை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்த்தல், விவசாயிகளுக்குத் துரோகம் எனத் தொடர்ந்து கொண்டிருப்பதால் மோடி அரசை அகற்றும் வரை விவசாயிகள் ஓய மாட்டார்கள்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மதவெறி அரசியலுக்கு உலை வைக்கின்ற வகையிலும், பாஜக வாக்கு வங்கிக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுகின்ற வகையிலும் அந்த மாநிலத்தில் உள்ள இந்துக்கள், முஸ்லிம்கள், ஜாட்கள் எல்லோரையும் விவசாயிகள் போராட்டம் ஒன்றிணைத்திருக்கிறது. இதை மூடி மறைப்பதற்காக காசி விஸ்வநாதர் கோயிலில் புனரமைப்பு என்ற போர்வையில் அரசியல் ஆதாயம் தேடுவதாலும், மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தி வாக்கு வங்கியை விரிவுபடுத்துகிற முயற்சியிலும் பிரதமர் மோடி நிச்சயம் வெற்றி பெற முடியாது. மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்தும் இவரது அரசியலுக்கு உத்தரப் பிரதேச மாநில விவசாயிகள் வருகிற தேர்தலில் உரிய பாடத்தைப் புகட்டுவார்கள்'’ என அவர் தெரிவித்தார்.

click me!