எங்களுக்கும் பேச தெரியும்.. ஆனா பேசமாட்டோம்.. அமைச்சர் காந்தியை விமர்சித்த சி.பி.ராதாகிருஷ்ணன்

By Raghupati RFirst Published Dec 19, 2021, 2:18 PM IST
Highlights

‘தமிழக முதல்வர் துவங்கும் திட்டங்கள் எல்லாம் தனது கட்சிகாரர்களுக்காக துவங்கப்படும்  திட்டமாக இருக்கிறது’ என்று விமர்சித்துள்ளார் கேரள பாஜக பொறுப்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்.

கேரள பாஜக பொறுப்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களை சந்தித்த போது, அமைச்சர் காந்தி, பாஜக தலைவர் அண்ணாமலையை கொச்சை வார்த்தைகளால் பேசியதை நாகரீகமிக்க மனித உள்ளம் ஏற்றுகொள்ளாது. இதைவிட தரம் தாழ்ந்து பேச எங்களுக்கு தெரியும். ஆனால், மோசமான வார்த்தைகளை பேச நாங்கள் விரும்பவில்லை. கலைஞர் என மரியாதையாக நாங்களும் சொல்கிறோம். தளபதி என ஸ்டாலினை நாங்களும் அழைக்கிறோம்.இருப்பினும், அண்ணாமலையை மட்டும் நீங்கள் தரக்குறைவாக பேசுகிறீர்கள். நீங்கள் உங்களை திருத்திகொள்ளுங்கள். அவதூறாக யார் பேசினாலும் அமைதியாக பணியாற்றுவது தான் அரசு அமைச்சர்களின் கடமை. 

ஆனால் ஸ்டாலின், மோடி பிரதமராக இருந்தும் அவரை திரும்பி போ என வாக்கு அரசியல் செய்தார். அவரும் அமைதியாக சென்றார். இந்து, கிறிஸ்தவர், முஸ்லீம் யார் நிர்வகித்தாலும் பள்ளியில் தவறு நடந்தால் அது நிர்வாக தவறுதான். பள்ளி கட்டிட சுவர் இடிந்து மூன்று குழந்தைகள் இறந்திருக்கிறார்கள். இந்த இழப்புகளை ஏற்படாமல் அனைத்து நடைமுறையையும் அரசு ஏற்படுத்த வேண்டும். 

தமிழக முதல்வர், மத துவேஷங்களை கலைந்து மக்கள் நலனில் அக்கறை காட்ட வேண்டும். நீர்நிலைகளளை காக்க வேண்டும் என்ற கோஷம் எழுந்துள்ளது. நீர்நிலைகளை எல்லாம் தகர்த்தது திமுக. அந்த இடங்களை கட்சிகாரர்களுக்கு பட்டா போட்டுகொடுத்தது திமுக தான். அது தவறு என்பதை உணர்ந்து நீர்நிலைகளை தூர்வாரி, ஏரி கரைகளை பலப்படுத்தி ஆறுகளை ஒன்றாக இணைக்கவும் வாய்ப்புகளை அரசு உருவாக்க முழுமையான கவனம் செலுத்த வேண்டும். 

அவ்வாறு கவனம் செலுத்தினால், பாஜக அதற்கு ஆதரவளிக்கும். உண்மையிலேயே முதல்வர், லஞ்ச லாவணத்தை ஒழிக்க கருதினால், கரூரை சேர்ந்த செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும். செந்தில் பாலாஜியை வைத்துவிட்டு ஊழலை ஒழிப்பேன் என்று சொல்வது, திருடர்கள் கூட்டத்தை வைத்துகொண்டு திருட்டை ஒழிப்பேன் என்பது போன்றதாகும். இது தமிழக மக்களை ஏமாற்றும் செயலாகும். 

ராஜுவ் கொலை வழக்கில், சிறையில் உள்ள 7 தமிழர்கள் விடுதலை என்பது தூக்கு தண்டனையை பெற்று அது குறைக்கபட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தண்டனையை முழுமையாக அனுபவிக்க வேண்டும். பாலியல் துன்புறுத்தலால்,குழந்தைகள் கொல்லப்பட்டது குறித்து கேட்டதற்கு: பாலியல் துன்புறுத்தல் பரவலாக அதிகரித்து வருகிறது. தமிழக முதல்வர் போர்க்கால அடிப்படையில் காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். கஞ்சா அதிகரித்து வருகிறது, இளைஞர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகின்றனர்’ என்று கூறினார்.

click me!