தமிழகத்தில் திமுக ஆட்சி முடிய இன்னும் 27 அமாவாசை மட்டுமே இருக்கிறது என்று கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி சேலம் மாவட்டம் கங்கவள்ளி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக இணை-ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், ‘அதிமுக ஒற்றுமையுடன் உள்ளது. திமுகவின் மிரட்டல்களுக்கு அதிமுகவினர் அஞ்சமாட்டார்கள். காவல்துறையினர் அமைச்சர்களுக்கு ஆதரவாக செயல்படாமல் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். அடுத்தமுறை ஒரேநாடு ஒரேதேர்தல் என மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் கூறுகின்றனர்.2024-ம் ஆண்டு வர இன்னும் 27 அமாவாசை தான் உள்ளது.
ஒரேநாடு, ஒரே தேர்தல் என்ற நடைமுறை வந்தால் அதில் தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும். ஆகவே, காவல்துறை அதிகாரிகள், மற்ற உயர் அதிகாரிகள் கவனமாக செயல்படவேண்டும். ஜனநாயக முறைப்பட செயல்பட வேண்டும். உங்கள் பணி எதுவோ அதை செய்யுங்கள். ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படக்கூடாது’ என்றார்.