மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தேர்தலில் தோற்றால் உயிரோடு இருக்க மாட்டேன் என பிரச்சாரக் களத்தில் அதிமுக வேட்பாளர் கதறி அழுத நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. பிரச்சாரத்தை நிறைவு செய்ய இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ளதால், வாக்குகளை வளைக்க வேட்பாளர்கள் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனர். சிலர் வாக்குறுதிகளை கூறியும் சிலர் செண்டிமெண்டாக பேசியும் ஓட்டு சேகரிக்கின்றனர்.
அந்த வகையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி 1-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் விஜயன், தனது குடும்பத்தினருடன் சென்று வாக்குசேகரித்து வருகிறார். செங்குளம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், ஒரு கட்டத்தில் திடீரென கதறி அழ ஆரம்பித்தார்.
undefined
பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேச தொடங்கிய அவர், தேர்தலில் தோற்றால் தாம் உயிரோடு இருக்க மாட்டேன் எனக் கூறினார். மேலும், தனக்கு இந்த ஊர் மக்கள் தான் முதல் மாலையை போட வேண்டும் எனவும் பேசினார். மக்கள் தன்னை கைவிட்டு விட்டால் தனக்கு வேறு வழியே இல்லை எனவும் பேசினார்.
இதைக்கேட்ட செங்குளம் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒரு சில பெண்கள் அழுதேவிட்டனர். அதிமுக வேட்பாளர் விஜயனோடு பிரச்சாரத்துக்கு வந்திருந்த அவரது மகனும், மனைவியும் மக்களிடம் காலில் விழுந்து வாக்கு சேகரித்தனர். விஜயனின் இந்த பிரச்சாரத்தால் அவரை எதிர்த்து போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் கலக்கம் அடைந்துள்ளார்.