
மு.க.ஸ்டாலினோ, அவரது தந்தை கருணாநிதியோ வந்தால்கூட இந்த ஆட்சியை ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்று விடுதலை போராட்ட வீரர் கக்கன்
பிறந்தநாளில் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
விடுதலைப் போராட்ட வீரர் கக்கனின் 109 பிறந்த நாள் இன்று மேலூர் வட்டத்தில் தும்பைப்பட்டியில் உள்ள அவரது மணி மண்டபத்தில், கூட்டுறவுத் துறை
அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டாலின் பேசுவது எல்லாம் ஜோக்காகத்தான் எடுத்துக்கொள்ள முடியும். அடிக்கடி ஊடகங்கள் மூலம் அவர்
தன்னை விளம்பரப்படுத்த ஏதாவது கருத்தை தெரிவிக்கிறார் என்றார்.
அவர் நினைப்பது போன்று குறுக்கு வழியில் முதலமைச்சராக வர வாய்ப்பே இல்லை. மீண்டும் அதிமுகதான் ஆட்சியைப் பிடிக்கும். சட்டமன்ற உறுப்பினர்கள்
ஒவ்வொருவரும் போட்டியிட்டு தொகுதி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்கின்றனர். எனவே, ஸ்டாலினோ, அவரது தந்தையோ வந்தால்கூட இந்த ஆட்சியை ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்று கூறினார்.
சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. நிலம் எவ்வளவு ஏக்கர் எடுக்கப்போகிறோம் என்பதை முதலமைச்சர் எடப்பாடி
பழனிசாமி திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இந்த திட்டத்தின் மூலம் 10 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்துக்கு கிடைக்கக்கூடியதைத் தடுக்கும் வகையில் தமிழ் விரோதிகள், தமிழினத் துரோகிகள் தூண்டி விடுவதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம் சாட்டினார்.