பாஜகவுடனான கூட்டணி முடிவடைந்துவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ள நிலையில், இதனை வரவேற்கும் விதமாக அதிமுகவினர் தமிழகம் முழுவதும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து அண்மையில் நடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தன. இந்நிலையில், அண்மை காலமாக பாஜக, அதிமுக தலைவர்களிடையே வார்த்தை மோதல் அதிகரித்து வந்தது. மேலும் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவுடனான கூட்டணி முறிந்துவிட்டதாக பகிரங்கமாக அறிவித்தார். மேலும் தேர்தல் தொடர்பான கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்யப்படும். தற்போதைய சூழலில், அதிமுக, பாஜக கூட்டணி முடிவடைந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதனை வரவேற்கும் விதமாக அதிமுகவினர் பலரும் அந்தந்த பகுதிகளில் தங்கள் கருத்துகளை போஸ்டர் அடித்து வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் அணியினர் சார்பில் விநாயகர் சதுர்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. அதில் விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையார் சுழி போட்டாச்சு. அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை.
கூட்டணி குழப்பத்தை சரி செய்ய டெல்லி தலைவர்கள் வரவேண்டும் - கிருஷ்ணசாமி அழைப்பு
நாளை நமதே 40ம் நமதே என்று ஒரு போஸ்டரும், மற்றொரு போஸ்டரில் IPS படித்தவனை ஆடு மேய்க்க விட்ட இயக்கமல்ல, ஆடு மேய்த்தவனை IPS ஆக்கிய அண்ணா பெயரில் இயங்கும் மாபெரும் மக்கள் இயக்கம். கூட்டணியாவது, கூந்தலாவது என்றும் அதிமுகவினர் அடுத்தடுத்து வரிகளால் விலாசி ஒட்டி உள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.