அதிமுக – பாஜக டீல் முடிந்தது..! விரைவில் தொகுதிப் பங்கீடு..!

By Selva KathirFirst Published Feb 16, 2021, 11:39 AM IST
Highlights

சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எத்தனை தொகுதிகள் என்பதை அதிமுக இறுதி செய்துள்ளதாகவும் அதனை பாஜக ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எத்தனை தொகுதிகள் என்பதை அதிமுக இறுதி செய்துள்ளதாகவும் அதனை பாஜக ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வந்தது, ரஜினி தலைமையில் கூட்டணி, அதிமுகவுடன் கூட்டணி, மூன்றாவது அணி என பல்வேறு வியூகங்களை வகுத்து பாஜக செயல்பட்டது. ஆனால் ரஜினி அரசியல் முடிவில் இருந்து பின்வாங்கியதால் முதல் வியூகம் தோற்றுப்போனது. இதே போல் மூன்றாவது அணி அமைக்க வலுவான கட்சிகள் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் பாஜக தலைமையை ஏற்க எந்த கட்சிகளும் தயாராக இல்லை. எனவே பாஜகவிற்கு இருந்த ஒரே வாய்ப்பு அதிமுக மட்டுமே.

தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் கூட்டணியை இறுதி செய்ய வேண்டிய நிர்பந்தமும் பாஜகவிற்கு இருந்தது. தமிழகத்தை பொறுத்தவரை தற்போது திமுக கூட்டணி பலமாக இருந்தாலும் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளோடு அதிமுக அமைக்கும் கூட்டணியும் நிச்சயம் திமுகவிற்கு ஈடுகொடுக்கும் என்பதில் பாஜகவிற்கு எவ்வித சந்தேகமும் இல்லை. இந்த தேர்தலை பொறுத்தவரை தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் கனவு பாஜகவிற்கு இல்லை. சட்டப்பேரவைகைக்கு கணிசமான எம்எல்ஏக்களை அனுப்ப வேண்டும் என்பது மட்டுமே பாஜகவின் வியூகம்.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக செல்வாக்குடன் உள்ளது. ஆனால் அங்கு சில தொகுதிகளை வெல்ல வேண்டும் என்றால் அதிமுக போன்ற கூட்டணி கட்சிகளின் உதவி தேவை. எனவே கன்னியாகுமரியில் உள்ள ஆறு தொகுதிகளில் 3 தொகுதிகளை பாஜக தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்கிற நிபந்தனையை அதிமுக ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த ஒன்றிற்காகவே பாஜக அதிமுக கூட்டணியை உறுதி செய்துவிட்டதாக சொல்கிறார்கள். மற்றபடி வேறு இடங்களில் அதிமுக ஒதுக்கும் தொகுதிகளை பாஜக போனசாக மட்டுமே பார்க்கிறது. ஏன் என்றால் தற்போதைய சூழலில் பாஜக வேட்பாளர்கள் கன்னியாகுமரி தாண்டி வெற்றி பெறுவது குதிரைக்கொம்பு என்பதை உணர்ந்துள்ளார்கள்.

எனவே தேவையில்லாமல் அதிக தொகுதிகளை பெற்று திமுக கூட்டணிக்கு சாதகமான விளைவுகளை கொடுத்விடக்கூடாது என்பதிலும் பாஜக கண்ணும் கருத்துமாக உள்ளது. மேலும் காங்கிரஸ் போட்டியிட உள்ள தொகுதிகளை குறி வைத்து பாஜக வியூகம் வகுத்து வருகிறது. எனவே திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிக்கு இணையாக தங்களுக்கு ஒதுக்கினால் போதும் என்று பாஜக கருதுகிறது. இதனை ஏற்றுக் கொண்ட அதிமுக தற்போதைய சூழலில் பாஜகவிற்கு 21 தொகுதிகளை இறுதி செய்துள்ளதாக தெரிகிறது. விரைவில் பாஜக – அதிமுக இடையே அதிகாரப்பூர்வ பேச்சுவார்த் நடைபெற உள்ளது.

அப்போது பாஜகவிற்கு எத்தனை தொகுதிகள் என்பதை அதிகாரப்பூர்வமாக அதிமுக அறிவிக்கும். அது என்னென்ன தொகுதி என்பது பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளோடு தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்த பிறகு அறிவிக்கப்படும்.

click me!