அதிமுகவுடன் சசிகலாவை இணைக்க சம்மதம்... ஓபிஎஸ்- இபிஎஸ் எடுத்த திடீர் முடிவு..!

By Thiraviaraj RMFirst Published Mar 25, 2021, 3:34 PM IST
Highlights

சசிகலா குறித்த இந்த அறிவிப்பு அதிமுகவில் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகலாவை அதிமுகவில் இணைப்பது தொடர்பான அறிவிப்பு எந்த நேரத்தில் வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளும் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இதுவரை வெளியான அனைத்து கருத்துக்கணிப்பு முடிவுகளுமே, திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று கூறியுள்ளன.

இந்த கருத்துகணிப்புகளின் படி திமுக – அதிமுக இடையிலான வாக்கு வித்தியாசமானது சுமார் 10% என்ற அளவில் இருக்கிறது. மக்கள் நீதி மய்யம், 4% வாக்குகளும், அமமுக 4% சதவீத வாக்குகளும், மற்ற கட்சிகள் 7% வாக்குகளும் பெறும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேற்கு மாவட்டத்தை பொறுத்தவரை கவுண்டர் சமுதாய வாக்குகளை அதிமுக தக்கவைக்கும் என்று இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. ஆனால், எதை நினைத்து வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதோ அதற்கான பலன் கிடைக்காது என்று கூறப்படுகிறது. வட தமிழகத்தில் வன்னியர்கள் வாக்கு அதிமுக கூட்டணிக்கு கிடைக்காது என்றும், தென் மாவட்டங்களில் கணிசமாக உள்ள முக்குலத்தோரின் வாக்குகள் அமமுகவால் பிரியும் என்றும் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வன்னியர்கள், கவுண்டர்கள், முக்குலத்தோர் ஆகியோர் நட்புடன் பழகி வருகின்றனர். இவர்களில் கவுண்டர்கள், முக்குலத்தோர் அதிமுகவின் பலமாக பார்க்கப்படும் நிலையில் வன்னியர்களின் ஆதரவை பெறவும் அதிமுக காய் நகர்த்தியது. ஆனால் அதிமுகவின் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு முடிவு, மற்ற சமூகங்களில் குறிப்பாக தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் உள்ளிட்ட சமூகங்கள் இடையே பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அமமுகவும் முக்குலத்தோரின் வாக்குகளை பிரிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று அதிமுகவினர் கருதுகின்றனர். இதன் காரணமாகவே சசிகலாவுக்கு எதிராக தர்ம்யுத்தம் நடத்திய ஓபிஎஸ், தனக்கும் சசிகலாவுக்கும் எந்த மனகசப்பும் இல்லை என்று பேட்டி கொடுத்துள்ளார். இதனால் சசிகலா பக்கம் ஓபிஎஸ் செல்லக்கூடும் என்று கூறப்பட்டது.

ஓபிஎஸ் மட்டுமல்ல, இபிஎஸ் கூட சசிகலாவை கட்சியில் இணைக்க தயாராகிவிட்டாராம். இபிஎஸ் –ஓபிஎஸ் இடையே மோதல் நீடிப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ஓபிஎஸ் தங்கியுள்ள ஹோட்டலுக்கே சென்று இபிஎஸ் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தான் சசிகலாவை அதிமுகவில் இணைப்பது தொடர்பாக இருவரும் பேசியுள்ளனர். அதிமுக மீது முக்குலத்தோர் சமூகத்திற்கு இருக்கும் அதிருப்தியை தற்காலிகமாக் சரிசெய்யும் வகையில் அதிமுகவை மீண்டும் சேர்ப்பது குறித்து ஓபிஎஸ் – இபிஎஸ் பேசி வருகிறார்களாம்.

அமைச்சர்கள் மூலம் சசிகலாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது அல்லது இபிஎஸ் – ஓபிஎஸ் இணைந்து சசிகலாவை அதிமுகவில் இணைப்பது தொடர்பான அறிக்கையை வெளியிடலாம் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். எனவே சசிகலா குறித்த இந்த அறிவிப்பு அதிமுகவில் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

click me!