
திட்டக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழழகன் இன்று அமமுகவில் இணைந்தார். அதிமுகவில் ஜனநாயகம் இல்லை என்றும் பணம் கொடுப்பவர்களுக்கே தொகுதி வழங்கப்படுவதாக குற்றச்சாட்டிய திட்டக்குடி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழழகன் டி.டி.வி.தினகரன் முன்னிலையில் அமமுகவில் இன்று தன்னை இணைத்துக் கொண்டார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. அதை எதிர்கொள்ள அதிரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் அதிமுக தொகுதி பட்டியலுடன் சேர்த்து வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு அதிரடி காட்டுயுள்ளது. இதில் முன்னாள் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கூட போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதிமுக மீது அதிருப்தி எம்எல்ஏவாக கருதப்பட்டுவந்த தமிழழகனுக்கு இந்த முறை சீட் வழங்கப்படவில்லை. அவரைப்போன்றே சுமார் 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிமுக தலைமை மீது கடும் அதிருப்தி அடைந்த தமிழழகன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் தினகரனை சந்தித்து கட்சியில் இணைந்தார்.
பிறகு செய்தயாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது ," 8 ஆண்டுகள் அதிமுகவில் அரசியல் பணி செய்து வந்துள்ளேன். தற்போது அதிமுக கட்சி ஏஜெண்ட் கார்ப்பரேட் கம்பெனி போல செயல்படுகிறது. அதிமுகவில் ஜனநாயகம் இல்லை. அமமுகவில் இன்று என்னை இணைத்துக் கொண்டேன். பணம் கொடுத்தவர்களுக்கே அதிமுகவில் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் இருக்கும் கூட்டம் தினகரன், சசிகலாவை நோக்கி வரும். தேர்தல் நேரத்தில் கட்சி நிதி எனும் பெயரில் கோடிக் கணக்கில் அதிமுகவில் சில தனி நபர்களுக்கு போய் சேருகிறது " என்று கூறினார்.