சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பதவியை பொன்முடி இழந்த நிலையில், புதிதாக யாருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில்,மூத்த அமைச்சரான ராஜ கண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
அமைச்சர் பதவி இழந்த பொன்முடி
சொத்து குவிப்பு வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதனையடுத்து பொன்முடி தனது எம்எல்ஏ பதவிக்கான தகுதியை இழந்துள்ளதால் அமைச்சர் பதவியையும் பறி கொடுத்துள்ளார். 3 ஆண்டு தண்டனை தற்போது 30நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ள நீதிமன்றம், மேல் முறையீடு செய்ய கால அவகாசம் வழங்கியுள்ளது. இந்தநிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டதையடுத்து புதிதாக யாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்தது.
புதிய அமைச்சர் யார்.?
ஏற்கனவே மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு துறை செந்தில் பாலாஜியிடம் இருந்த அமைச்சர் பொறுப்பானது அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மின்சாரத்துறையும், மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதலாக ஒதுக்கப்பட்டது. எனவே தற்போது உள்ள சூழ்நிலையில் புதிய நபர்களுக்கு அமைச்சர் பதவி வழங்காமல் பழைய அமைச்சர்களுக்கே கூடுதலாக பொறுப்பு ஒதுக்கப்படும் என தெரிகிறது. இந்தநிலையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு கூடுதலாக உயர்கல்வித்துறை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிடப்படும் .
இதையும் படியுங்கள்