திமுக ஆட்சி அமைக்குமா? அதிமுகவில் இருந்து விலகி ஸ்டாலினுக்கு ஆதரவு அளிக்க 7 எம்எல்ஏக்கள் ரெடி !!

By Selvanayagam PFirst Published Apr 30, 2019, 7:09 AM IST
Highlights

மே 23 ஆம் தேதிக்குப் பிறகு  எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று முடிவு செய்துள்ள திமுக  7 முதல் 10 அதிமுக எம்எல்ஏக்களிடம் பேரம் வருவதாகவும், அவர்கள் திமுக ஆதரவு அளித்தால் அவர்களது பதவி பறிக்கப்படாமல் இருப்பதற்கு தேவியான சட்ட நடவடிக்கைகளையும் அக்கட்சி எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே நடைபெற்ற 18 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலுடன் வரும் 19 ஆம்தேதி 4 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த 22 தொகுதி இடைத் தேர்தல் முடிவுகள் வரும் 23 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. அதில் திமுக வெற்றி பெற்றால் அதிமுக ஆட்சி கவிழ்ந்து புதிய ஆட்சி உருவாக வாய்ப்புள்ளது

இந்த இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானதும், எப்படியும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும்' என, தி.மு.க., திட்டமிட்டுள்ளது. இதற்காக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஏழு பேருக்கு வலை விரித்து, பேரம் பேசி வருவதாக கூறப்படுகிறது.


 
தி.மு.க., ஆட்சி அமைக்க முற்பட்டால், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களில்,குறைந்த பட்சம் ஏழு பேர் முதல், அதிக பட்சம், 10 பேர் வரை, ஆதரவு தருவார்கள் என ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நம்புகின்றனர்.

சூலுார் தொகுதியை ஜெயித்து கொடுத்தால், 25 நாட்களில், இந்த ஆட்சியை மாற்றும் பொறுப்பை, நான் ஏற்றுக் கொள்கிறேன்  என  கோவையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், தி.மு.க., பொருளாளர், துரைமுருகன் பேசியதற்கு இதுதான் காரணம் எனவும் கூறப்படுகிறது.

தற்போது, திமுகவுக்கு  88 எம்.எல்.ஏ.,க்கள்; அதன் கூட்டணி கட்சிகளான, காங்கிரசுக்கு எட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு, ஒரு எம்.எல்.ஏ.,வும் உள்ளனர். அதாவது, இந்த கூட்டணிக்கு, மொத்தம், 97 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.

கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில், காங்., வேட்பாளர், வசந்தகுமார் வெற்றி பெற்றால், எம்.எல்.ஏ., பதவியை, அவர் ராஜினாமா செய்ய வேண்டும். அப்போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை ஏழாகவும், தி.மு.க., கூட்டணி, எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, 96 ஆகவும் குறையும்.

திமுக  ஆட்சி அமைக்க, 117 எம்எல்ஏக்கள் தேவை. இடைத்தேர்தல் நடக்கும் அனைத்து தொகுதிகள் அல்லது, 21 தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெற்றால்எளிதில் ஆட்சி அமைத்து விடலாம். தொகுதிகள் சற்று குறைந்தால், அதை சரி செய்ய, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களில், ஏழு முதல், 10 பேர் ஆதரவை பெற, தி.மு.க., திட்டம் வகுத்துள்ளது.

அதிமுக எம்எல்ஏக்களை இழுக்கும் பொறுப்பு, அக்கட்சியின் எம்எல்ஏ ஒருவரிடமும் , அதிமுக முன்னாள் அமைச்சரும், அமமுகவில் இருந்து அண்மையில் விலகிய ஒருவரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே நேரத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவுக்கு ஆதரவு அளித்தால், அவர்கள்  பதவியை இழக்க நேரிடும். அப்படி ஒரு நிலை வந்தால், இடைத்தேர்தலில், திமுக சார்பில் வேட்பாளராக்கி வெற்றி பெற வைத்து, அமைச்சர் பதவி தரப்படும் என்று, உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மே 23 ஆம் தேதிக்கும் பிறகு தமிழக அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் ஏற்படும் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

click me!