பொள்ளாச்சி பாலியல் வழக்கு… கையிலெடுத்தது சிபிஐ !! ஆவணங்கள் ஒப்படைப்பு !!

By Selvanayagam PFirst Published Apr 29, 2019, 10:55 PM IST
Highlights

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடி  இன்று சி.பி.ஐ.யிடம் ஓப்படைத்தது. 

பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த வழக்கு தொடர்பாக உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் நியாயம் கிடைக்காது என்று அப்பகுதி மக்களும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்ட் நிஷா பார்த்திபன் 40 சாட்சிகளின் வாக்குமூலம் மற்றும் பல்வேறு தடயவியல் ஆதாரங்களை திரட்டினார்.

இந்த வழக்கில் கைதாகி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசு உள்பட 4 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரித்தனர்.

இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதற்கு தமிழக அரசும் சம்மதித்து சி.பி.ஐ.க்கு  வழக்கை மாற்றுவது தொடர்பாக அரசாணை வெளியிட்டது.

இதைதொடர்ந்து, பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைதான 7 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து சிபிஐ கடந்த 27-ம் தேதி விசாரணையை தொடங்கியது. 

இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களும் இன்று சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஓப்படைக்கப்பட்டதாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தெரிவித்தனர். 

click me!