கொத்தாக அமமுகவுக்கு தாவும் அதிமுக முக்கிய புள்ளி ! கொண்டாட்டத்தில் தினகரன் கட்சி வேட்பாளர் !!

By Selvanayagam PFirst Published Apr 29, 2019, 11:37 PM IST
Highlights

கோவை சூலூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட தனக்கு வாய்ப்பளிக்கவில்லை என்பதால் கடும் கோபமடைந்த கோவை முன்னாள் மேயர்  செ.ம.வேலுச்சாமி, தற்போது பகிரங்கமாக சூலூர் அமமுக வேட்பாளரை ஆதரித்து வருகிறார். இடைத் தேர்தல் முடிவடைந்ததும் முறைப்படி அவர் டி.டி.வி.தினகரனை சந்தித்து அமமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூலூர் தொகுதிக்கான அதிமுக வேட்பாளர் கந்தசாமி அறிமுகக் கூட்டமும், செயல் வீரர்கள் கூட்டமும் நேற்று  சூலூரில் அமைச்சர் வேலுமணி தலைமையில் நடந்தது. இதில் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் போன்ற பலர் கலந்துகொண்டனர். கோவை முன்னாள் மேயர்  செ.ம. வேலுசாமி மட்டும் ஆப்செண்ட்.

சூலூர் தொகுதிக்கு அதிமுக சார்பில் சீட் கேட்டு கிடைக்காமல் போன கோபத்தில் செ.ம. வேலுச்சாமி கூட்டத்துக்கு வரவில்லை என்றும், இவர் விரையில் டி.டி.வி.தினககனை சந்தித்து அமமுகவில் இணையப் போவதாக கூறப்படுகிறது.

வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் வேலுமணி,  நம்மகிட்ட தகுதியானவங்க 50 பேர் இருக்காங்க. ஆனா தொகுதி ஒன்னுதான் இருக்கு. அதனால ஒருத்தருக்குதான் கொடுக்க முடியும். விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வருது. அதனால இப்ப எந்தெந்த பகுதியில அதிக ஓட்டு வாங்குறீங்களோ, அந்த நிர்வாகிகளுக்கு உள்ளாட்சியில வாய்ப்பு வழங்கப்படும்’ என்று அறிவித்தார்.

அதே நேரத்தில்  செ.ம,.வேலுசாமியின் சொந்த ஊரான செங்கத்துறைக்குள் நேற்று நுழைந்த அமமுக வேட்பாளருக்கு செ.ம.வேலுச்சாமி ஆதரவாளர்கள் செமையாக வரவேற்பு அளித்தனர். இதன் மூலம் வேலுசாமி வேலை செய்வது அதிமுகவுக்கா, அமமுவுக்கா என்ற கேள்விகளும் அதிமுகவுக்குள் எழுந்திருக்கின்றன.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அமமுக வை தனது சொந்த கிராமமான செங்கத் துறை, காடாம்பாடி ஆகிய ஊர்களில் வாக்கு கேட்க முடியாத நெருக்கடியை கொடுத்தார் வேலுசாமி. ஆனால் தற்போதைய நிலையே வேறு. செ.ம.வேலுசாமி பிறந்த ஊரான செங்கத்துறையில் ஏப்ரல் 28 ஆம் தேதி அமமுகவுக்கு தடபுடலான வரவேற்பு கொடுத்து அசத்தியிருக்கிறார்கள். 

செங்கத்துறை ஊராட்சி அதிமுக செயலாளர் செந்தில்குமார் அமமுகவில் நேரடியாக திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளர் சி.சிவசாமி முன்னிலையில் இணைந்ததோடு அந்தக் கிராமத்திலுள்ள 2600 வாக்குகளில் 2000 வாக்குகளும் டிடிவி தினகரனுக்கே கிடைக்கும் என சூளுரைத்துள்ளார்.

சமீபத்தில் பாமகவிலிருந்து விலகி அமமுகவில் இணைந்த பொங்கலூர் மணிகண்டனும் சூலூர் தொகுதியிலேயே வசிப்பவர். அவரது வீட்டில் நேற்று முன்னாள் எம்.பி சிவசாமி தலைமையில் 200க்கும் மேற் பட்டோர் கூடி ஆலோசித்துள்ளனர். அதில் அதிமுக அதிருப்தியாளர்களை அமமுகவின் பக்கம் இழுப்பது குறித்து சிவசாமி திட்டங்களை விளக்கியுள்ளார்.

இந்தக் கூட்டத்தை முடித்துக் கொண்டு செ.ம. வேலுசாமியின் கோட்டையாக உள்ள கிராமங்களுக்கு அமமுகவினர் நேரில் சென்றனர். அப்போதுதான் தினகரன் வேட்பாளருக்கு அதிமுகவினர் வரவேற்பு அளித்திருக்கின்றனர். 

சூலூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 15க்கும் மேற்பட்ட அதிமுக ஊராட்சி செயலாளர்கள் அமமு க வேட்பாளர் கே.சுகுமாரை மறைமுகமாக ஆதரித்து வருகின்றனர். இப்போது பின்னணியில் இருந்து வேலை செய்துவிட்டு, தேர்தலுக்குப் பிறகு செ.ம.வேலுசாமி அமமுகவில் ஐக்கியமாகும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகயுள்ளன.

click me!