சொந்த கட்சிக்கு சாபம் விட்ட மகளிரணி.. “அ.தி.மு.க. உருப்படவே உருப்படாது! கத்திய எடுத்துனு குத்த வர்றானுங்க..!”

By Ganesh RamachandranFirst Published Jan 24, 2022, 5:41 PM IST
Highlights

அரண்டு போன மகளிரணியினர் மாஜி அமைச்சர்கள், .பி.எஸ்., .பி.எஸ். ஆகியோரிடம் ஓடிச்சென்று உதவி கேட்டு தப்பியுள்ளனராம்

அது ஜெயலலிதா தமிழக முதல்வராகவும், அ.தி.மு.க. பொதுசெயலாளராகவும் கோலோச்சிக் கொண்டிருந்த நேரம். போயஸ் கார்டனிலிருந்து கோட்டைக்கு அவரது கார் கான்வாய் செல்லும் வழக்கமான ரூட்டில் அவரது கட்சியினர், பொதுமக்கள் நின்று வணக்கம் வைப்பதும், தொடர்ந்து பல நாட்கள் நிற்போரிடம் ஜெ., ‘என்ன பிரச்னை? என்ன கோரிக்கை?’ என்று கேட்பதும் வழக்கம்.

இப்படித்தான் 2012ம் ஆண்டில் போயஸ் கார்டனிலிருந்து சிறிது தூரத்தில் நடுத்தர வயது பெண்கள் சிலர் அ.தி.மு.க. கரை சேலையோடு ஜெயலலிதாவை  ரெகுலராக கும்பிட்ட படி நின்றனர். ஒருநாள் அவர்களின் கோரிக்கை என்ன? என்று கேட்கச் சொன்னார் ஜெ., தங்களை விசாரித்த முதல்வரின் உதவியாளரிடம் ‘நாங்க வடசென்னை பகுதி மகளிரணியினர். மாவட்ட கழக அணியின் அ.தி.மு.க. நிர்வாகி எங்களை டீ வாங்கிட்டு வர, காஃபி போட்டு கொண்டு வர, அவரு  வீட்டம்மாவுக்கு ஒத்தாசையா மார்க்கெட்டுக்கு போயிட்டு வர சொல்றாரு. இதுக்காம்மா நாங்க கட்சியில உழைக்கிறோம்?’ என்று புகார் சொன்னார்கள். தகவல்  ஜெயலலிதாவின் காதுகளுக்குப் போனது. அடுத்த அரைமணி நேரத்தில் அந்த நிர்வாகியின் பதவி காலி.

அந்த மாவட்டத்தின் செயலாளரை அழைத்து, ‘மகளிரணிகிட்ட எவனாச்சும் வாலாட்டுனீங்கன்னா தூக்கி எறிஞ்சிடுவேன். இதை உன் ஆளுங்கட்ட சொல்லி வை மேன்.’ என்று மிக கடுமையாக எச்சரித்து அனுப்பினார். மகளிரணிக்காக ஜெ., முகம் செக்கச்சிவந்ததை  பார்த்து அந்த நிர்வாகிக்கு உடல் நடுநடுங்கிவிட்டது.

இதுதான் ஜெயலலிதா தலைமையிலான மிலிட்டரி லெவல் அ.தி.மு.க.

ஆனால் அதே அ.தி.மு.க.வின் இன்றைய நிலையோ? மிலிட்டரி ஹோட்டல்  கொத்து பரோட்டா ரேஞ்சுக்கு குந்தாங்கூறாக பிய்ந்து போய் கிடக்கிறது. அதற்கான நெத்தியடி உதாரணம்தான் எம்.ஜி.ஆர். பிறந்தநாளன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மகளிரணியினருக்கு நடந்த கொடுமை. அதாவது தென்சென்னை வடக்கு மாவட்ட மகளிரணிச் செயலாளரான ஸ்ரீவித்யா, எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவுக்கு யூத்தான பெண்களை அழைத்துக்கொண்டு வராமல், வயசான பெண்களை அழைத்து வந்ததற்காக மாவட்ட கழக நிர்வாகியிடம் மிக மிக மோசமான அர்ச்சனைக்கு ஆளாகியிருக்கிறார். ‘உன்னை இங்கேயே தோரணம் கட்டி தொங்க விட்டிருவேன்’ என்று அந்தப் பெண்மணியை மிக கேவலமான முறையில் திட்டியிருப்பதாக எடப்பாடியாருக்கு புகார்.

அதுமட்டுமல்லாமல் இவ்வளவு இழிவாக பேசிய நிர்வாகியிடம் நியாயம் கேட்க ஆர்பாட்டத்தில் இறங்கிய களிரணி பெண்களை காதே கருகிப் போகுமளவிலான கெட்ட வார்த்தையில் திட்டியிருக்கிறது ஆண் அ.தி.மு.க. கூட்டம் ஒன்று. அதோடு மட்டுமில்லாமல் கத்தியை எடுத்துக்கொண்டு குத்த வந்துள்ளனர் கோபத்தில். அரண்டு போன மகளிரணியினர் மாஜி அமைச்சர்கள், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகியோரிடம் ஓடிச்சென்று உதவி கேட்டு தப்பியுள்ளனராம்.

இந்த விவகாரம் பற்றிப் பேசும் மகளிரணியினர் “இந்த மாதிரி அநியாயம் பண்ற, பெண்களை கிள்ளுக்கீரையா நினைக்கிற நபர்கள் நிர்வாகிகளாக இருக்கிற வரைக்கும் அ.தி.மு.க. உருப்படவே உருப்படாது. தலைமை இவர்களையெல்லாம் தூக்கி அடிக்கணும்.” என்று பொங்குகின்றனர்.

ஹும், பொங்க வேண்டிய ரெண்டுபேருமே பொசுக்குன்னு அமைதியானா எப்படி?

click me!