ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் பிரம்மாண்டமான மாநாட்டை நடத்த உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் பிரம்மாண்டமான மாநாட்டை நடத்த உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் ஆணையம் அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்று அங்கீகரித்துள்ளது. நீதிமன்றமும் இதையேதான் கூறியுள்ளது. அதிமுக இனி பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்படும். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக வெற்றிகரமாக இயங்கும். ஏற்கனவே நீதிமன்ற தீர்ப்பின்படி, பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அனைத்து பொது உறுப்பினர்கள் எல்லாம் சேர்ந்து ஒருமனதாகப் பொதுச்செயலாளரைத் தேர்வு செய்துள்ளனர். எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவை நிச்சயம் நாங்கள் நனவாக்குவோம். நீண்ட சட்ட போராட்டத்திற்குப் பின்னர் தான், இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. 1.5 கோடி அதிமுக தொண்டர்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து கொண்டு இருக்கிறார்கள். எங்களுக்கு மக்கள் பணி இருக்கிறது. இனி மற்றவர்கள் குறித்துப் பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஒரு சிலரைத் தவிர்த்து உண்மையான அதிமுக தொண்டர்கள் அனைவரையும் கட்சிக்குள் இணைத்துக் கொள்ள நாங்கள் தயாராகவே உள்ளோம். ஏற்கனவே இது குறித்து அழைப்பு விடுத்துள்ளோம். ஒரு சிலர் என்று யாரைச் சொல்கிறேன் என்று அனைவருக்கும் புரியும்.
இதையும் படிங்க: காவல்துறையில் இருக்கும் கருப்பு ஆடுகளையும் களையெடுக்கனும்... முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!
புதிய உறுப்பினர் சேர்க்கை பணி தொடங்கப்பட்டுள்ளது. பூத் கமிட்டி அமைக்கும் பணி, மகளிர் அணி அமைப்பது, இளைஞர்கள்- இளம்பெண்கள் பாசறை தொடங்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். ஒற்றை தலைமை என்று நீங்கள் யாரும் என்னைச் சொல்ல வேண்டாம். நான் ஒரு சாதாரண தொண்டர்தான். உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து என்னைப் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்து உள்ளார்கள் அவ்வளவு தான். கட்சிக்கு ஒரு வலுவான தலைமை என்பதால் தான், கட்சி தொண்டர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். என்னைப் பொறுத்தவரை இன்றும் நான் சாதாரண தொண்டன் தான். அவர்கள் அனைவருடன் இணைந்து பயணித்து அதிமுக ஆட்சியை அமைப்பதே எங்கள் இலக்கு. தமிழ்நாட்டில் திமுகவை எதிர்க்கும் ஒரே கட்சி நாங்கள்தான். எனவே, அதிமுகவை வலுவூட்டும் அனைவரையும் கட்சிக்குள் இணைத்துக் கொள்வதில் எங்களுக்குச் சந்தோஷம்தான். அதிமுக எப்போதும் ஒன்றுதான். அதற்கு இன்று தெளிவான முடிவு வந்துவிட்டது. இங்கே குழப்பமே இல்லை. சில சுயநலவாதிகள் மட்டுமே கட்சியில் இருந்து பிரிந்து சென்றுள்ளனர். கட்சியில் 1.5 கோடி தொண்டர்கள் இருக்கும் நிலையில், 2 கோடி தொண்டர்களாக அதிகரிக்கத் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் இனி உரிய முடிவை எடுப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்.
இதையும் படிங்க: ராகுல் காந்தியின் பதவி நீக்கத்தை கண்டித்து சேலத்தில் பிஎஸ்என்எல் அலுவலகம் முற்றுகை
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் தான் அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறது. கர்நாடக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது நிர்வாகிகளின் கோரிக்கை. ஒரு தொகுதியில் மட்டும் நிற்கிறோம். எங்கள் அடையாளத்திற்காக நாங்கள் நிற்கிறோம். தலைமை கழகத்தில் அத்துமீறி நுழைந்தது யார்? ஆவணங்களை எடுத்துச் சென்றது யார்? என்பது அனைவருக்கும் தெரியும். இன்று ஓபிஎஸ் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவே இது குறித்து சட்டசபையில் பேசியுள்ளார். ஓபிஎஸ் திமுக ஆட்சியின் பீ டீமாக செயல்படுகிறார். அவர்களுடன் இணைந்து தான் தலைமை கழகத்திற்குள் நுழைந்து சூறையாடியுள்ளார். அடுத்து சில நிமிடங்களில் அதிகாரிகள் வந்து சீல் வைக்கிறார்கள். எப்படி எல்லாம் அடுத்தடுத்து நடக்கிறது. திமுக ஓபிஎஸை பயன்படுத்தி இந்த நாடகத்தை நடத்தினார்கள். வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் பிரம்மாண்டமான மாநாட்டை நடத்த உள்ளோம். இந்திய வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய மாநாடு நடந்தது இல்லை என்பது போல நடத்திக் காட்டுவோம் என்று தெரிவித்துள்ளார்.