
அதிமுகவைக் காப்பாற்ற இரு அணிகளும் இணைய வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதால்தான் இரு அணிகள் இணைப்பு நடைபெற்றதாகவும், மோடியின் வற்புறுத்தலுக்காவே துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டதாகவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இதே நேரத்தில் தர்மயுத்தம் என்ற பெயரில் சசிகலாவை எதிர்த்து முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததோடு ,அதிமுகவிலிருந்தும் வெளியேறினார் ஓபிஎஸ்.
இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக்கப்பட்டார். சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து ஓபிஎஸ்ம், இபிஎஸ்ம் இணைந்தனர். ஓபிஎஸ் தலைமையிலான அணி, இபிஎஸ் அணியுடன் இணைந்தது. ஓபிஎஸ் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசுதான் இரு அணிகளையும் இணைத்து வைத்துள்ளது என்றும், பாஜக தமிழக அரசைஆட்டுவிக்கிறது என்றும் எதிர்கட்சிகள் அப்போது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்தன. ஓபிஎஸ்ம், இபிஎஸ்ம் மாதம் மூன்று முறை பிரதமரை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தனர். இது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை உறுதி செய்தன
அதற்கேற்றாற்போல் ஜெயலலிதா மிகக் கடுமையாக எதிர்த்த உணவு பாதுகாப்பு சட்டம், உதய் மின்திட்டம், நீட் போன்ற மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் மளமளவென நிறைவேற்றப்பட்டன. ஆனால் தமிழக நலனுக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவதாக ஓபிஎஸ் சப்பைக்கட்டு கட்டினார்.
இந்நிலையில் இரு அணிகளின் இணைப்பு பின்னணியில் பாஜகதான் இருந்தது என்ற உண்மையை ஓபிஎஸ் ஒப்புக்கொண்டுள்ளார். தேனியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைகூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அதிமுகவை காப்பாற்ற இரு அணிகளும் இணைய வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதால்தான் இரு அணிகள் இணைப்பு நடைபெற்றதாக கூறினார்.
மரியாதை நிமித்தமாக டெல்லி சென்று பிரதமரை சந்தித்த போதெல்லாம் இரு அணிகளும் இணைய வேண்டும் என அவர் வலியுறுத்தியதாகவும், அவர் கேட்டுக் கொண்டதால்தான் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டதாகவும் ஓபிஎஸ் தெரிவித்தார்.