பொன்னாருக்கு ஆணவம் அதிகமாகிடுச்சு! காசையும் வெளியே எடுக்க மாட்டேங்கிறார்! : போட்டுப் பொளக்கும் அ.தி.மு.க!

By Vishnu PriyaFirst Published Jan 14, 2020, 3:30 PM IST
Highlights

அ.தி.மு.க.வை கட்சியை பொறுத்தவரையில், ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி, ஒரு மடங்கு உழைத்தாலே போதும் எளிதில் வெல்வோம். ஆனால், பா.ஜ.க.வுக்காக நாங்கள் இரு மடங்கு உழைத்தோம். 

பனிப் பொழிவு முடிந்த பின்னும் குளிர் போகாதது போல், ஊரக உள்ளாட்சி தேர்தலின் கூத்துக் கும்மாளங்கள் ஒருவழியாக முடிந்துவிட்டன. ஆனால், எப்படி  தி.மு.க. கூட்டணிக்குள் காங்கிரஸ்  புகார் குழப்பத்தை உருவாக்கி இருக்கிறதோ, அதேபோல அ.தி.மு.க. கூட்டணிக்குள் பா.ஜ.க. பெரும் கலகத்தை உருவாக்கி இருக்கிறது. தேர்தல் ரிசல்ட் வந்த பின் ‘தனித்து நின்றிருந்தால், கூடுதலாக வென்றிருப்போம்’ என்று ஒரு போடு போட்டார் பா.ஜ.க.வின் முக்கிய தலைவரான பொன்.ராதாகிருஷ்ணன். இதைக் கேட்டு செம்ம டென்ஷனாகிவிட்டனர் அ.தி.மு.க.வின் வி.வி.ஐ.பி.க்கள். காரணம்!  பா.ஜ.க.வுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கியதோடு, தமிழகத்தில் அக்கட்சி மீது அதிருப்தியில் இருக்கும் மக்களின் நடுவில் அவர்களுக்காக பிரசாரமும் செய்யும் ரிஸ்க்கையும் தாங்கள் எடுத்ததால்தான். 


இந்நிலையில்  பொன்ராதாகிருஷ்ணனின் உரசல் பேச்சுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் ஆளுங்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான அன்பழகன். அவர் “பொன்னாருக்கு ஆணவம் அதிகமாக இருக்கிறது. அவர் எங்களைப் பற்றி கடுமையாக அவதூறுகளைப் பரப்பி வருகிறார். தனித்து நின்றிருந்தால் பா.ஜ.க. பெரும் வெற்றி பெற்றிருக்கும் என அவர் சொல்வதை சீரியஸாக எடுப்பதா இல்லை காமெடியாக எடுத்துக் கொள்வதா எனபுரியவில்லை. 
அ.தி.மு.க.வை கட்சியை பொறுத்தவரையில், ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி, ஒரு மடங்கு உழைத்தாலே போதும் எளிதில் வெல்வோம். ஆனால், பா.ஜ.க.வுக்காக நாங்கள் இரு மடங்கு உழைத்தோம். கன்னியாகுமரி மாவட்டத்தில் கோவளம் பகுதி முழுக்க முழுக்க மீனவர்கள் பகுதி. தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் கோட்டை இது. ஆனால் அங்கே பா.ஜ.க.வுக்கு ஆதரவாக நாங்கள் வாக்கு சேகரிக்க சென்றபோது, பெரிதும் தயக்கமாக இருந்தது. மக்களுக்கு பா.ஜ.க.வை பற்றிப் புரிய வைப்பதற்குள் தலை சுத்திவிட்டது எங்களுக்கு. கன்னியாகுமரி மாவட்டத்தில் பா.ஜ.க.வுக்காக இரவு பகல் பார்க்காம வேலை பார்த்தது நாங்கதான். எங்கள் வாக்குகளையும் சேர்த்ததால்தான் அவங்க வெற்றி பெற்றிருக்கிறாங்க.


முஸ்லிம், கிறுத்தவர்கள் வாங்கும் பகுதிகளில், ‘குடியுரிமை சட்டத்தினால் இந்திய முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இதற்கு நாங்கள் கியாரண்டி’ன்னு பேசிப் பேசித்தான் மக்களை பா.ஜ.க.வை நம்ப வைத்தோம். சிறுபான்மை பகுதிகளிலும் பா.ஜ.க. வெல்ல நாங்கள்தன் காரணம். அ.தி.மு.க.வை நம்பித்தான் மக்கள் அவர்களுக்கு ஓட்டுப் போட்டார்கள். இதெல்லாம் பொன்னாருக்கு தெரியுமா தெரியாதா? கைச்செலவுக்கு கூட பணமில்லாமல்தான் பா.ஜ.க. வேட்பாளர்கள் பிரசாரத்துக்கு வந்தனர். பொன்னார் எந்தச் செலவும் செய்யவில்லை. அவர்களுக்கும் சேர்த்து நாங்கள்தான் செலவழித்தோம்ன்னா பார்த்துக்கிடுங்க.  இவ்வளவு ஏங்க, போட்டி வேட்பாளர் என்பது தி.மு.க., அ.தி.மு.க.வில் மட்டுமில்லை பா.ஜ.க.விலும் தலைவிரித்தாடியது. அதனால்தான் பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் தோற்றாங்க.

அதனால பொன்னார் தன் வீட்டுப் பிரச்னைகளை தீர்த்து வெச்சுட்டு, அடுத்த வீட்டுப் பிரச்னைகளுக்கு வரட்டும். தனித்துப் போட்டியிடுவதுதான் பா.ஜ.க.வுக்கு விருப்பம்னா, டெல்லி தலைமையிடம் அனுமதி வாங்கிவிட்டு முழுவதுமா தனித்தே நின்றிருக்கலாமே! எதற்காக உள்ளாட்சித் தேர்தல் குறித்த எங்கள் பேச்சுவார்த்தைகளில் அவர்கள் பங்கேற்க வேண்டும்? தோல்வி ஏற்பட்டதால் எங்களை சாடும் பொன்னார், வெற்றி பெற்றிருந்தால் அதற்கு எங்களைப் பாராட்டுவாரா? பொன்னார் போன்றோரின் நன்றி மறந்த ஏளனத்தை  எதிர்கொண்டு, பெரும்  வெற்றியை பெற்றுள்ளது அ.தி.மு.க. எங்களுக்கென்னவோ கூடணியை உடைக்கும் நோக்கத்துடன் தான் பொன்னார் இப்படியெல்லாம் பேசுகிறார்! என தோன்றுகிறது.” என்று பொங்கி வழிந்திருக்கிறார். அடேங்கப்பா! என்னா ஒரு கோவம்!?

click me!