திமுக காங்கிரஸ் கூட்டணி உடைகிறது...?? பட்டும் படாமல் சொன்ன டிஆர். பாலு...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 14, 2020, 2:43 PM IST
Highlights

குறிப்பாக இந்த அறிக்கை படி திமுக தலைவர் மீது அவர் குற்றம் சாட்டி உள்ளதாகவே நாங்கள் கருதுகிறோம் எனவேதான் டில்லியில் காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றார்,  

திமுக தலைவர் ஸ்டாலினை அவமதித்து அறிக்கை வெளியிட்டதாலேயே  நாங்கள் டெல்லியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர்  டி.ஆர் பாலு வெளிப்படையாக பதில் அளித்துள்ளார் .  திமுக -காங்கிரஸ் கூட்டணி பழைய நிலைக்கு திரும்புமா என்ற கேள்விக்கும் காலம்தான் பதில் சொல்லும் என பாலு பட்டும்படாமல் பதில் அளித்திருப்பது இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் அதிகமாகிவிட்டது என்பதையே காட்டுவதாக உள்ளது.   இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய மற்றும் மாவட்ட தலைவர் பதவிகளில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு உரிய இடங்களை கூட்டணியில் உள்ள திமுக  வழங்கவில்லை  என சுட்டிக்காட்டிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே . எஸ் அழகிரி அதுகுறித்து சில தினங்களுக்கு முன்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் .

அதில்  திமுக கூட்டணி தர்மத்தை மதிக்கவில்லை என காட்டமாக கூறியிருந்தார் ,  இது  திமுக-காங்கிரஸ் கூட்டணி இடையே மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றிருந்த திமுகவின் முதன்மை செயலாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான டி. ஆர் பாலு,  கடைசி நேரத்தில் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் சென்னை திரும்பினார் .  இந்நிலையில்  அதுகுறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த  டி ஆர் பாலு ,  திமுக கூட்டணி தர்மத்திற்கு துரோகம் இழைத்து விட்டது என அழகிரி குற்றம்சாட்டியுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் எப்படி திமுக கலந்து கொள்ள முடியும் என கேள்வி எழுப்பினார் .  இந்நிலையில் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் ,  திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு ,  ஆர்.எஸ் பாரதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர் . அதன்பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த டிஆர் பாலு,  

தமிழக காங்கிரஸ் தலைவர்  கே. எஸ் அழகிரி ,  சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர் இதுகுறித்து திமுக வின் பல்வேறு உறுப்பினர்கள்,  தலைவரிடமும்  என்னிடமும் தங்களுடைய மன சங்கடத்தை வெளிபடுத்தினர்.   திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறதா..?   எனவும் கேட்டார்கள் காங்கிரஸ் அந்த அறிக்கையை தவிர்த்திருக்கலாம் ,  மேலும் அது குறித்து திமுக தொண்டர்கள் கவலையில் உள்ளனர் .  குறிப்பாக இந்த அறிக்கை படி திமுக தலைவர் மீது அவர் குற்றம் சாட்டி உள்ளதாகவே நாங்கள் கருதுகிறோம் எனவேதான் டில்லியில் காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றார்,  திமுக காங்கிரஸ் கூட்டணி பழைய நிலைமைக்கு வருமா.?  என செய்தியாளர்கள் கேட்டதற்கு அதற்கு காலம்தான் பதில் சொல்லும் என்றார் அவர். 
 

click me!