
என்னடா இன்னமும் அந்த புகார் கிளம்பவில்லையே? என்று அரசியல் விமரசகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த புகார் இதோ கிளம்பிவிட்டது.
ஆம்! ரஜினிகாந்தின் அரசியல் பிரவேச முஸ்தீபுகளுக்கு ஆளுங்கட்சி முட்டுக்கட்டை போடும் விவகாரம் துவங்கிவிட்டதாம்.
விறுவிறு உறுப்பினர் சேர்ப்பில் துவங்கி பல விஷயங்களுக்கு மறைமுகமாக தடுப்பு வேலி அமைத்து சூப்பரின் ரசிகர்களை தவிக்க விடுகிறதாம் அரசுத்துறை.
இது குறித்து ரஜினி ரசிகர்களின் புலம்பல் இப்படி இருக்கிறது...”எங்க தலைவரோட ரசிகர் மன்றத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளோட லிஸ்டை எடுத்திருக்கிற போலீஸ், அதை வெச்சு பல ஜகஜால வேலைகளை பார்க்கிறாங்க.
குறிப்பா தலைவரோட மன்ற நிர்வாகிகள் யாராவது அரசாங்கத்திடமிருந்து காண்ட்ராக்ட் முதலான ஆதாரங்களை பெற்றுக் கொண்டிருந்தால் அதுக்கு நச்சுன்னு ஆப்பு வைக்கிறாங்க. இதை நாங்க சும்மா சொல்லலை.
நாகப்பட்டிணம் மாவட்டம் மயிலாடுதுறையில் ‘ரஜினி மக்கள் மன்ற நகர பொறுப்பில்’ இருந்த ராஜேஸ்வரனோட காண்ட்ராக்ட் தொழிலுக்கு ரிவிட் அடிச்சுட்டாங்க.
இதே மாதிரி இன்னும் பல முக்கிய நிர்வாகிகளின் தொழிலை முடக்குறதுக்கான விஷயங்களை முடுக்கி விட்டிருக்காங்க.
தலைவரோட அரசியல் பிரவேசம் பற்றி மக்களுக்கு தெரிவிக்க, கூட்டம் நடத்த அனுமதி கேட்டாலும் அதை மறுத்துடுறாங்க. அதையும் மீறி சட்டரீதியாக அனுமதி கேட்டோம்னா வேற வகையில செக் வைக்கிறாங்க.
அதாவது, நாங்க கூட்டம் நடத்த அனுமதி கேட்ட விஷயத்தை அ.தி.மு.க. ஆளுங்கட்ட சொல்லி, அவங்களை அதே நாள்ள கூட்டம் நடத்த அனுமதி கேட்க வைக்கிறாங்க. எங்ககிட்ட ‘ஒரே நாள்ள ரெண்டு பேரும் அனுமதி கேட்டால் எப்படி? முதலில் வந்தவங்களுக்கே முன்னுரிமை’ன்னு சொல்லி அவங்களுக்கு டேட் கொடுத்துடுறாங்க.
இல்லேன்னா ‘நீங்க கூட்டம் போடுற ஏரியா சென்சிடீவா இருக்கு. அங்கே அனுமதி தந்தால் சட்டஒழுங்கு சிக்கலாகும்’ன்னு சொல்லி மறுக்குறாங்க. இப்படி ஏகப்பட்ட குடைச்சலை கொடுக்குறாங்க.
என்ன பண்றது, இப்பவே இப்படின்னா இன்னும் கட்சியை தலைவர் துவக்கிட்டார்னா கண்டபடி எங்களை நசுக்கத்தான் செய்வாங்க.
ஆனா அதையெல்லாம் தாண்டிதான் அரசியல் பண்ணி, ஆட்சியை பிடிக்கணும். சூப்பர் ஸ்டாருக்கே சுளுக்கெடுக்க துடிக்கிற ஆளுங்கட்சியை சும்மாவிட்டுடுவோமா நாங்க?” என்கிறார்கள்.
சர்தான்!..