
அடுத்த மாதம் 21-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாமின் வீட்டிலிருந்து கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவித்து அரசியல் சமுத்திரத்தில் தனது கட்டுமரத்தை இறக்குகிறார் கமல்.
அதிகாரப்பூர்வ அரசியலை அறிவித்த கையோடு தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செல்கிறார். அப்போது கமல் என்னென்ன செய்ய இருக்கிறார், அரசியலில் அவரது ஆக்ஷன் மற்றும் ரியாக்ஷன்கள் எப்படியெல்லாம் இருக்கும்?....
* சுற்றுப்பயணத்தின் போது முக்கிய மற்றும் தேவைப்படும் இடங்களில் மக்களோடு கலந்துரையாடுவார் கமல்.
* தென் தமிழகத்தில் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள அத்தியாவசிய திட்டங்கள் பற்றிய முழு தகவலும் இப்போது கமலின் கைகளில். அதை ஸ்டடி செய்து கொண்டிருப்பவர், அவற்றை முக்கியமாக தனது உரைகள், கலந்துரையாடல்களின் போது மக்களிடம் வைப்பார்.
* முக்கிய மக்கள் நல திட்டங்கள் முடக்கப்பட்டதன் பின்னணி, சூழ்ச்சி ஆகியன பற்றி உடைத்துப் பேசி தன் அரசியல் இருப்பை வலுவாக்க கமல் முயல்வார். இதன் மூலம் ஆளுங்கட்சியின் தூக்கம் கெடப்போவது உறுதி.
* ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒன்றரை அல்லது ஒரு லட்சம் பேரையாவது சந்திப்பது கமலின் திட்டம்.
* மக்களுடனான சந்திப்பின்போது, தன்னை சினிமாக்காரனாக இல்லாமல் சக போராளியாக காண்பிப்பதற்கான எல்லா முயற்சிகளையும் கமல் முன்னெடுப்பார்.
* கட்சி பெயர், கொடியை அறிவித்த பின் மாதம் ஒரு மாவட்டம் என முழு தமிழ்நாட்டையும் கமல் கடந்து செல்வார்.
* கட்சி துவக்கிய பின் தி.மு.க. உள்ளிட்ட எதிர் கட்சிகளை வீணாக வம்புக்கிழுத்து பேசமாட்டார். ஆனால் தி.மு.க. ஆட்சியிலிருந்த காலத்தில் செயல்படுத்த தவறிய, மறுத்த மக்கள் நல திட்டங்களை கோடிட்டுக் காட்டி தெறிக்க விடவும் தயங்கிட மாட்டார்.
* ரஜினி அரசியல் பிரவேசத்தை அறிவித்த பிறகும் அவருடனான நட்பை எந்த சேதாரமுமின்றி இப்போது வரை காக்கிறார் கமல். அரசியலுக்குள் நுழைந்த பின் ரஜினியின் கருத்தில் முரண்பாடு ஏற்பட்டால் அதை நட்பை கடந்து நிச்சயம் பதிவு செய்திடுவார்.
* தேர்தலே அரசியல் என்பது ரஜினியின் எண்ணமாக இருக்கிறது. அதாவது வசூலே வெற்றிகரமான சினிமா என்று ரஜினி நினைத்தது போல். ஆனால் வெற்றியோ அல்லது தோல்வியோ வித்தியாசமான கதைகளம், கதாபாத்திரங்களே நல்ல சினிமா என்று தான் இதுவரையில் வாழ்ந்தது போலவே வித்தியாச அரசியலையும் முன்னெடுப்பார் கமல்.
ஹூம்! மொத்தத்துல மீடியாவுக்கும், மக்களுக்கும் செம தீனி காத்திருக்குது.