அதிமுக உங்கள் பக்கம்..ஸ்டாலினுக்கு கைக்கொடுத்த ஓபிஎஸ்.. கர்நாடக அரசை டாராக கிழித்து அதிரடி அறிக்கை..

By Thanalakshmi VFirst Published Jan 23, 2022, 3:37 PM IST
Highlights

ஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தடுத்து நிறுத்த தார்மீக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் கர்நாடக அரசுக்கு உரிமை இல்லை என்றும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்குரிய அனைத்து உரிமைகளும் தமிழ்நாட்டிற்கு உண்டு என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
 

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவுத் திட்டமான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை விரைவுபடுத்தி அவர்களின் கனவினை நனவாக்கியவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.முதன்முதலில் 1986ம் ஆண்டு எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலகட்டத்தில் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1994ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டும் போதிய நிதியுதவி கிடைக்காததன் காரணமாக அந்தத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை.

இந்தத் திட்டம் துவங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், ஜெயலலிதா 2011ம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்றபோது, 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட பணிகள் முடிவடைந்திருக்க வேண்டிய நிலையில் வெறும் 18 விழுக்காடு பணிகளே முடிவடைந்திருந்தன. ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பயனளிக்கக்கூடிய ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை முடுக்கிவிட்டதன் காரணமாக 1,928 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான இத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.

திமுக ஆட்சிக் காலத்தில் மூன்று ஆண்டுகளில் வெறும் 18 விழுக்காடு பணிகளே முடிவடைந்த நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 82 விழுக்காடு பணிகளை முடித்து இந்தத் திட்டத்தை 29-05-2013 அன்று காணொலிக் காட்சி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தவர் ஜெயலலிதா. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட முழுக் காரணமானவர் ஜெயலலிதாவும், அதிமுகவும் ஆட்சியும்தான் என்பதை இந்தத் தருணத்தில் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில் எந்தத் திட்டத்தை அறிவித்தாலும் அதனை எதிர்ப்பது என்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது கர்நாடக அரசு. அந்த வகையில் தற்போது தனது எதிர்ப்பினை கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கர்நாடக அரசின் இந்த எதிர்ப்புக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவேரி நதிநீர் பங்கீட்டில், தமிழ்நாடு கீழ்ப்பகுதி மாநிலம். சட்டப்படி தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டிய நீரைக் கூட திறந்துவிட மறுப்பதையும், கர்நாடகாவில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பிய பிறகு உபரி நீரை திறந்துவிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்ற கர்நாடக அரசுக்கு தமிழ்நாட்டிற்குள் மேற்கொள்ளவிருக்கும் ஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தடுத்து நிறுத்த தார்மீக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் உரிமை இல்லை. இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்குரிய அனைத்து உரிமைகளும் தமிழ்நாட்டிற்கு உண்டு. இதனை இந்த அரசு நிச்சயம் நிறைவேற்ற வேண்டும். இதற்கு அதிமுக தனது முழு ஆதரவினை நல்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

click me!