கார் கயலான் கடைக்குப் போகுது... எம்.பி. பதவியும் முடியப்போகுது... ‘ நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...’ என அதிமுக எம்.பி. விரக்தி?

By Asianet TamilFirst Published Jul 9, 2019, 9:06 PM IST
Highlights

2007 முதல் கடந்த பன்னிரண்டு ஆண்டுகாலம் எனது குடும்ப உறுப்பினர் போல் நான் மிகவும் நேசித்த வண்டி இந்த அம்பாசிடர் கார். லட்சம் கி.மீ.க்கும் அதிகமாக ஓடிய வண்டி. பாராளுமன்றம், விமான நிலையம், பிரதமர் இல்லம், குடியரசுத் தலைவர் மாளிகை, நார்த் பிளாக், சவுத் பிளாக், பல்வேறு கட்சித் தலைவர்கள் இல்லம், தர்மயுத்த நாட்கள் என்று பரபரப்பாக ஓடிய இந்த அம்பாசிடர் கார் இப்போது ஓய்வெடுக்க உள்ளது. 

ஜூலை 24-ம் தேதியுடன் எம்.பி. பதவி முடிவடைய உள்ள நிலையில் ‘ நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...’என்ற பாடலின் வரிகளைப் போட்டு முகநூலில் பதிவு செய்துள்ளார் அதிமுக எம்.பி. மைத்ரேயன்.
அதிமுக எம்.பி.யாக 3 முறை தேர்வு செய்யப்பட்டவர் டாக்டர் மைத்ரேயன். பாஜகவிலிருந்து அதிமுகவுக்கு வந்த இவருக்கு 3 முறை மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பை வழங்கினார் ஜெயலலிதா. அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை அல்லது மத்திய சென்னையில் போட்டியிட விரும்பிய அவருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. மேலும் 4-வது முறையாக மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கும் என்றும் எதிர்பார்த்தார். கடைசியில் அதுவும் நடக்கவில்லை.

 
இந்நிலையில் தன்னுடைய ராசியான அம்பாசிடர் கார் கயலான் கடைக்கு செல்ல உள்ளதைப் பற்றியும் எம்.பி. பதவி நிறைவு பெற உள்ளதையும் குறிப்பிட்டு முகநூல் பக்கத்தில் மைத்ரேயன்  நிலைத்தகவல் பதிவிட்டுள்ளார். அதில், “2007-ம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரானபோது அம்பாசிடர் கார் வாங்கினேன். அதற்கு முன்பு எஸ். எஸ். சந்திரன் 2002-ல் வாங்கி, அவரது பதவிக்காலம் 2007 ஜூலையில் முடிவுற்ற பின்னர் அவரிடம் இருந்து நான் வாங்கினேன். 2002 - 07 வரை இந்த வண்டி 28000 கி. மீ. ஓடியது. டீசல் வண்டி என்பதால் டெல்லி மாநகர போக்குவரத்து விதிப்படி 15 ஆண்டுகளுக்கு மேல் டீசல் வண்டிகளின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும். எனவே சென்ற ஆண்டு ஹூண்டாய் அக்சென்ட் கார் வாங்கினேன்.


 2007 முதல் கடந்த பன்னிரண்டு ஆண்டுகாலம் எனது குடும்ப உறுப்பினர் போல் நான் மிகவும் நேசித்த வண்டி இந்த அம்பாசிடர் கார். லட்சம் கி.மீ.க்கும் அதிகமாக ஓடிய வண்டி. பாராளுமன்றம், விமான நிலையம், பிரதமர் இல்லம், குடியரசுத் தலைவர் மாளிகை, நார்த் பிளாக், சவுத் பிளாக், பல்வேறு கட்சித் தலைவர்கள் இல்லம், தர்மயுத்த நாட்கள் என்று பரபரப்பாக ஓடிய இந்த அம்பாசிடர் கார் இப்போது ஓய்வெடுக்க உள்ளது. எனது பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியோடு முடிவதையொட்டி எனது பாசத்திற்குரிய அம்பாசிடர் காரும் இந்த வாரம் கயலான் கடைக்கு செல்ல உள்ளது. அதன் பிறகு அடுத்த வாரம் ஹூண்டாய் அக்சென்ட் காரை விற்க ஏற்பாடு செய்யவுள்ளேன். 
" எங்கே வாழ்க்கை தொடங்கும்,
அது எங்கே எவ்விதம் முடியும்,
இதுதான் பாதை, இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது. 
பாதையெல்லாம் மாறி விடும், 
பயணம் முடிவதில்லை...."
இவ்வாறு மைத்ரேயன் முகநூலில் குறிப்பிட்டுள்ளார். காருக்கு சென்டாப் கொடுக்க போடப்பட்ட இந்தப் பதிவில்,  ‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...’ என்ற பாடல் வரிகளைப் போட்டு முடித்திருப்பதன் மூலம் தனக்கு எம்.பி. பதவி கிடைக்காமல் போனதையும் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளதாகவே நினைக்கத் தோன்றுகிறது. 

click me!