
ஜாமினில் வெளிவந்த தினகரன், என்னை யாரும் கட்சியில் இருந்து நீக்க முடியாது என்றும் அந்த அதிகாரம் பொது செயலாளருக்கு மட்டுமே உண்டு என்றும் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் தீவிர அரசியலில் இறங்கப்போவதாகவும் கூறி இருந்தார்.
அதை கேட்டு கொதிப்படைந்த அமைச்சர் ஜெயக்குமார், உடனடியாக அமைச்சர் செங்கோட்டையனை தொடர்பு கொண்டு, ஏற்கனவே, தாம் சொன்னதை கேட்காததால் ஏற்பட்ட விளைவை பார்த்தீர்களா? என்று வருத்தப்பட்டு இருக்கிறார்.
பார்த்தீர்களா அவர் பேசியதை. நான் அன்றைக்கே அவரை நீக்க வேண்டும் என்று சொன்னேன். நீங்கள் யாரும் கேட்கவில்லை. இப்போது என்ன சொல்கிறார் பாருங்கள்? என்றவர், எடப்பாடி அண்ணனிடம் இதுகுறித்து உடனடியாக பேசுங்கள் என்றும் கூறி இருக்கிறார்.
சென்னைக்கு வந்து இனி தனியாக அரசியல் பண்ண போகும் அவர், இனி என்னென்ன சிக்கல்களை எல்லாம் இழுத்துவிட போகிறாரோ? என்றும் அச்சம் தெரிவித்திருக்கிறார் ஜெயக்குமார்.
அதற்கு, அவர் பத்து பேரை வைத்து கொண்டு அவரால் அரசியல் செய்ய முடியுமா? புகழேந்தியை அடிக்கடி சந்தித்து பேசும் செந்தில் பாலாஜிதான் அதற்கு உடந்தையாக இருக்கிறார் என்று செங்கோட்டையன் கூறி உள்ளார்.
மேலும், யார் வேண்டுமானாலும் அவரை போய் பார்க்கட்டும், பேசட்டும், எது வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால் நாம் யாரும் அவரை போய் பார்க்காமல் புறக்கணிப்போம் என்றும் சொல்லி இருக்கிறார்.
அத்துடன், அமைச்சர்கள் அனைவரும் செல்பேசி வாயிலாக ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு தினகரனை எப்படி சமாளிப்பது? என்று ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தினகரனை அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்கும் முடிவை எடுப்பதற்கு காரணமாக இருந்தது, ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகிய மூவர் கூட்டணியே.
தற்போது அந்த கூட்டணியில், தினகரனின் தீவிர ஆதரவாளராக இருந்த செங்கோட்டையனும் இணைந்திருப்பது, தினகரனுக்கு எதிரான நிலைப்பாட்டை மேலும் வலுவாக்கி உள்ளது.