
’தங்கம் போற போக்கே சரியில்ல!’ _ தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் 33 பேரும் தினகரனிடம் உடைத்துச் சொல்லியிருக்கும் வெளிப்படையான ரகசியம் இதுதான்.
சசிகலா மற்றும் தினகரனை எடப்பாடி அண்ட்கோ கட்சியிலிருந்து விலக்கி வைப்பதாக அறிவித்ததும், தினகரனுக்கு ஆதரவாக கிளர்ந்து எழுந்தவர் தங்கத்தமிழ் செல்வன் எம்.எல்.ஏ.தான். தினகரன் திஹாரில் இருந்தபோதும் அவரது பிரதிநிதியாக இருந்து கட்சியில் அவருக்கான இடம் பறிபோய்விடாமல் பார்த்துக் கொண்டவர். ’சமாதானமா போயிடுங்க தங்கம். அமைச்சர் போஸ்டிங்கே ரெடி பண்ணிக்கலாம்.’ என்று அமைச்சர்கள் சிலர் புழுவை செருகி தூண்டில் போட்டபோது கூட அலட்சிய மீனாக தினகரனிருக்கும் திசை பார்த்து நீந்தியவர்.
தினகரன் சிறை மீண்ட பிறகும் அவருக்காக மிகப்பெரிய கேன்வாஸ் ஒன்றை உருவாக்கி தன்னையும் சேர்த்து 34 எம்.எல்.ஏ.க்களை அவருக்கு ஆதரவானவர்களாக இழுத்து எடப்பாடி அணியையும், பன்னீர் அணியையும் பதறி தெறிக்க வைத்தார்.
தினகரன்...எள் என்றால் எண்ணெய்யாக மட்டுமில்லை எண்ணெய் பலகாரமாகவே வந்து நின்றார் தங்கத்தமிழ்ச்செல்வன். தினகரனுக்காக யாரையும் சவால் விட்டு பேசும் அவரது தொனியும், பன்னீர் என்ன பன்னீர்? என்று ஓ.பி.எஸ்.ஸின் கண்களில் விரல் விட்டு ஆட்டிய அவரது தெனாவெட்டும் தினகரன் அணியை திமிறி எழ வைத்தது.
தினகரனுக்கு கட்சியில் தனி செல்வாக்கு வேண்டும், தலைமை கழகத்துக்கு அவர் வரும் சூழலை உருவாக்க வேண்டும், அ.தி.மு.க. சார்பாக நடத்தப்படும் இஃப்தார் நோன்பிற்கு தினகரனையும் அழைக்க வேண்டும்...என்றெல்லாம் எடப்பாடியிடம் தினகரனுக்காக போராடிப் பார்த்தவர்.
இப்படி தினகரனுக்காகவே எல்லாமுமாக அரசியல் செய்து வந்த தங்கத்தமிழ் செல்வனின் சமீபத்திய செய்கைகள் அப்செட் தருவதாக தினகரனின் அணி எம்.எல்.ஏ.க்கள் பொறுமுகிறார்கள்.
அவர்கள் சொல்வது இதுதான்...நேற்று கேள்வி நேரத்தின் போது சுகாதாரத்துறை சம்பந்தமான கேள்விகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்துக் கொண்டிருந்தார். தங்கத்தமிழ்ச்செல்வன் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதில் தந்தார்.
இந்நிலையில் துணை கேள்வி கேட்க தங்கம் மீண்டும் கை உயர்த்தினார் ஆனால் சபாநாயகர் அனுமதிக்கவில்லை. ஆனால் தங்கமோ விடாமல் கை உயர்த்தியபடி சபாநாயகரை பார்த்து ஆதங்கமாய் பேசினார். அப்போதும் சபாநாயகர் அனுமதிக்கவில்லை. இதனால் கோபத்துடன் எழுந்த தங்கம் வெளிநடப்பு செய்துவிட்டார். நாங்கள் சார்ந்திருக்கும் தினகரன் அணியின் தளபதி போல்தான் அவர் இருக்கிறார். தான் கிளம்பிப் போகும்போது எங்களிடம் எதையும் தெரிவிக்கவுமில்லை. எங்களை ஒரு பொருட்டாகவே அவர் எடுத்துக் கொள்ளவில்லை.
இதுமட்டுமில்லை பிற்பகலுக்குப் பின் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சந்தித்து அளவளாவினார். தான் வெளிநடப்பு செய்தபோது தனக்காக மேஜையை தட்டி உற்சாகப்படுத்தி ஆரவாரம் செய்ததற்காக தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு நன்றியும் சொன்னார்.
யதேச்சையாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சந்தித்து தங்கம் சிரித்திருந்தால் தவறில்லை. ஆனால் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மா.சுப்பிரமணியம் போன்ற தி.மு.க. முக்கியஸ்தர்களை சந்தித்து ’நீங்க சபையில பேசுறதும், கேட்கிறதும் சரியான விஷயம்தான். முதல்வர் அணியை தவிர மத்தவங்களுக்கு கேள்வி கேட்கவோ, கருத்து சொல்லவோ எந்த சுதந்திரமும் தரப்படலேன்னா எப்படி?’ அப்படின்னு ரொம்ப சகஜமா பேசிட்டிருந்தார்.
தங்க தமிழ்ச்செல்வனோட இந்த நடவடிக்கைகளை எப்படி எங்களால ஜீரணிச்சுக்க முடியும்? என்னதான் எடப்பாடி அணியும், பன்னீர் அணியும் எங்களுக்கு வேண்டாதவங்களானாலும் அவங்க எங்க கட்சி ஆளுங்க அப்படிங்கிறதுல நாங்க உறுதிய இருக்கோம். தினகரன் நினைச்சிருந்தா எப்பவோ எதிர்கட்சி கூட சேர்ந்து கூட்டணி போட்டு எடப்பாடி ஆட்சியை கவுத்தியிருக்கலாம். ஆனா அவர் அதை பண்ணல. அம்மாவின் ஆட்சி நிலைக்கணும்னுதான் இப்பவும் நினைக்கிறார்.
ஆனா தங்கத்தமிழ்ச்செல்வனோ தன்னுடைய சுய தேவைக்காகவும், சுய விளம்பரத்துக்காகவும் தி.மு.க. ஆளுங்களை வலிய சந்திச்சு பேசுறதும், நன்றி சொல்லி கூடி குலாவுறதும் அசிங்கமா இருக்குது. அதிலும் எங்களை புறக்கணிச்சுட்டு போயி வெளிநடப்பு அதுயிதுன்னு தனி லாபி பண்றது சரியா படல.
இதை தினகரனிடம் விரிவா சொல்லிட்டோம். வழக்கம்போல் புன்னகையோட கேட்டுக்கிட்டார். ஒருவேளை தங்கத்தின் செயல்பாடுகள் எல்லாமே தினகரனோட சம்மதத்தோட நடக்குதா இல்ல தங்கம் தடம் மாறுகிறாரான்னு எங்களுக்கே புரியலை.” என்கிறார்கள்.
அவ்வ்வ்....அ.தி.மு.க. மறுபடியும் உடைஞ்சு தங்கத்தமிழ் செல்வன் அணின்னு ஒண்ணு உருவாகாம இருந்தா சரி!