
முதல்வர் எடப்பாடியும், அமைச்சர்களும் எடுத்த முடிவின்படி, கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து தினகரன் முற்றிலுமாக ஓரம் கட்டப்பட்டு விட்டார்.
கட்சியின் துணை பொது செயலாளராக இருந்தும், கட்சி தலைமை அலுவலகத்தில் நுழைய முடியாத துர்பாக்கிய நிலை ஏற்பட்டு விட்டது தினகரனுக்கு. தம் எதிரில் கைகட்டி நின்ற அமைச்சர்கள் எல்லாம், இன்று ஒதுக்கியது, ஒதுக்கியதுதான் என்று தெனாவட்டாக பேட்டி கொடுக்கின்றனர்.
ஆட்சி இருக்கும் வரைதான் நமக்கு மரியாதை. ஆட்சி கவிழ்ந்து விட்டால், நம்மை யாரும் மதிக்கமாட்டார்கள் என்று சசிகலா வேறு அவ்வப்போது எச்சரித்து கொண்டிருக்கிறார்.
அது எடப்பாடி தரப்புக்கு இன்னும் சாதகமாகி விடுகிறது. எத்தனை எம்.எல்.ஏ க்களை வளைத்து நெருக்கடி கொடுத்தாலும், கொஞ்சமும் சளைக்காமல் இருக்கிறார். இதனால், என்ன செய்வது? என்று தமக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி தீர்த்துள்ளார் தினகரன்.
அப்போது, ஆட்சி இருக்கும்வரைதானே எடப்பாடியாலும், அமைச்சர்களாலும் ஆட்டம் போட முடியும். ஆட்சியை கவிழ்த்துவிட்டால் அவரால் என்ன செய்ய முடியும் என்று நாஞ்சில் சம்பத்தும், புகழேந்தியும் கேட்டுள்ளனர்.
ஆட்சி போனால் என்ன?. அடுத்த ஐந்தாண்டு காலம் எதிர் கட்சியாக இருந்து செயல்படுவோம். ஊர் ஊராக சென்று தொண்டர்களை சந்தித்து, அவர்களுடன் நெருங்கி, பேசி கட்சியை வளர்ப்போம்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவை கட்டி காத்து வந்த உங்கள் குடும்பத்தையே, ஒதுக்க நினைக்கும் எடப்பாடி தரப்புக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும். உங்களுக்கு பயன்படாத கட்சியும், ஆட்சியும் இருந்தால் என்ன? கவிழ்ந்தால் என்ன? என்றும் அவர்கள் கூறி இருக்கின்றனர்.
அதற்கு பதில் அளித்த தினகரன், சின்னம்மா சொல்வதால்தான் நான் இவ்வளவு பொறுமையாக இருக்கிறேன். மேலும் என்னால் இந்த கட்சிக்கும், ஆட்சிக்கும் எந்த சிக்கலும் வர கூடாது என்று பார்க்கிறேன் என்று கூறி உள்ளார்.
மேலும், நீங்கள் இருவரும் எம்.எல்.ஏ க்களாக இல்லை. அதனால், ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்கிறீர்கள். ஆனால், எம்.எல்.ஏ க்களாக இருப்பவர்கள், இன்னும் நான்காண்டுகளுக்கு தங்கள் பதவி போய்விட கூடாது என்றுதானே நினைக்கிறார்கள்? என்ன செய்வது.
சின்னம்மா சொன்னதுபோல், இன்னும் 60 நாட்கள் பார்ப்போம். அதற்குள் அவர்கள் பணியவில்லை என்றால், நமக்கு பயன்படாததை, மற்றவர்களுக்கும் பயன்படாமல் செய்து விடுவோம் என்று தினகரன் கூறியதாக தகவல்.