
பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்துப் பேசியிருக்கிறார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. குடியரசுத் தலைவர் தேர்தல், குதிரை பேர விவகாரம் உள்ளிட்டவை இருவரும் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் வெகு ஜோராக தொடங்கி விட்டன. சுதந்திரத்திற்குப் பிறகு பெரும்பான்மை பலத்துடன் தேர்தலை எதிர்கொள்ளும் பா.ஜ.க., பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்தை தனது வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளது. வெற்றி பெறுவதற்கான அத்தனை வாய்ப்புகளும் உள்ள நிலையிலும், அதிமுகவின் அத்தனை வாக்குகளையும் தனதாக்கிக் கொள்ள விரும்புகிறது.
தங்களது வேட்பாளரை ஆதரிக்கும் படி தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பிரதமர் மோடி ஆதரவு கோரியிருந்தார். இருப்பினும் டிடிவி.தினகரனின் எதிர்விணையால் சில ஓட்டுகள் சிதறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக டெல்லி மேலிடம் கருதுகிறது. இதனைத் தொடர்ந்து அழைக்கப்பட்ட தம்பிதுரையிடம், இருக்கும் சூழல் தங்களுக்கு நன்றாகவே தெரியும். சிந்தாமல் சிதறாமல் உங்கள் கட்சி வாக்குகளை அளிக்க நடவடிக்கை எடுங்கள் என்று உத்தரவிடப்பட்டதாம்.
எடப்பாடியிடம் மட்டும் பிரதமர் ஆதரவு கோரியிருப்பது டிடிவி தினகரன் விரும்பவில்லை. “நாட்டின் மூன்றாவது பெரியகட்சி. எங்களுக்கென்று கட்சி அலுவலகம் இருக்கிறது. அங்கு வந்து ஆதரவு கேட்டிருக்க வேண்டும்” என்று தனது ஆதரவாளரான தங்கதமிழ்ச்செல்வனை வைத்து பேட்டியளித்திருக்கிறார் தினகரன்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.வுக்கு வாக்களிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் தினகரனிடம் மத்திய அரசின் உத்தரவை எப்படிக் கூறுவது என்று குழம்பிப் போன தம்பிதுரை, நேராக சிறையில் இருக்கும் சசிகலாவிடம் இது குறித்து பேசியிருக்கிறார். “தேர்தலில் நமது கட்சியின் வாக்குகள் வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து உங்களிடமும் தகவல் சொல்லுமாறு தெரிவித்தள்ளனர். மத்திய அரசின் விருப்பங்கள் குறித்து தினகரனிடம் நீங்கள் தான் எடுத்துக் கூற வேண்டும் என்றார்.
தம்பிதுரையைத் தொடர்ந்து தினகரனும் இன்று பெங்களூருவுக்கு திடீர் விஜயம் அடித்தார். சிறைச்சாலையில் சசிகலாவைச் சந்தித்த அவர், குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்த விரிவாகவே பேசியுள்ளார். இதுவரை காங்கிரஸ் தனது வேட்பாளரை அறிவிக்கவும் இல்லை, அப்படி அறிவித்தாலும் அதிமுகவிடம் ஆதரவு கேட்க போவதில்லை . இந்த நிலையில் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்பது பாஜக மட்டுமே, நமக்கும் வேறுவழியில்லை, பாஜகவை ஆதரிப்பதை தவிர நமக்கு வேறு வழியே இல்லை. கட்சியையும் சின்னத்தையும் மீட்டெடுக்க வேண்டும், இதற்க்கு முன் ஜாமீன் வேலைகளும் நடக்க வேண்டும் என பேசிக்கொண்டார்களாம்.
இதனையடுத்து தினகரனிடம் பேசிய சசிகலா எதை செய்தாலும் நிதானமாகச் செய்ய வேண்டும் என்று பலமுறை கூறியிருக்கிறேன். எல்லாம் நமக்கு சாதகமாக வரும் வரை அமைதியாகத் தான் இருக்க வேண்டும். கொஞ்ச நாள் பொறுமை காப்போம். அமைதியாக இரு என்றாராம் சசிகலா.
அத்துடன் எந்தவித சிக்கலும் இல்லாமல், குடியரசு தலைவர் தேர்தலில், அதிமுகவின் வாக்குகள் அனைத்தும் பாஜகவுக்கு சென்றடைய வேண்டும் என்றும் தினகரனுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதனால், தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட எம்.எல்.ஏ க்களை எப்படி சமாளிப்பது? என்று தினகரன் சற்று குழம்பி போயுள்ளார். ஆனாலும், சசிகலா சொல்வதை கேட்பதை தவிர அவருக்கு வேறு வழியில்லை.
சொத்து குவிப்பு வழக்கில் சீராய்வு மனு, தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள பொது செயலாளர் மற்றும் சின்னம் தொடர்பான பஞ்சாயத்து, எடப்பாடியும், பன்னீரும் மோடியிடம் காட்டும் நெருக்கம் என பல சிக்கல்களுக்கு மத்தியில், பாஜக நிபந்தனைகளை ஏற்பதை தவிர சசிகலாவுக்கு வேறு வழியில்லை என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.