
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு இரு அணிகளாக செயல்பட்டது. இதனால், இரு தரப்பினரும் கடும் மோதலில் ஈடுபட்டனர். ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டினர்.
இதையொட்டி கடந்த 12ம் தேதி நடக்க இருந்த ஆர்கே நகர் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில், இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில், பலருக்கு காயம் ஏற்பட்டது. இந்த மோதல் சம்பவத்தில் பொதுமக்கள் பலரும் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், இரு அணிகளும் மீண்டும் ஒன்று சேர்வதாக நேற்று மாலை பரபரப்பு தகவல் பரவியது. இதையொட்டி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் தங்கமணி வீட்டில் ஆலோசனை நடந்தது.
அப்போது, பெங்களூரில் இருந்து டிடிவி.தினகரன் வந்ததும், இரு அணிகள் ஒன்று சேருவது குறித்து முடிவு செய்யப்படும் என அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதைதொடர்ந்து இன்று காலை சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலில் அமைச்சர்கள் மற்றும் ஓபிஎஸ் அணியினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். கப்பலை பார்வையிடுவதுபோல் சென்று, நடுக்கடலில் பேச்சு வார்த்தை நடக்கிறது.
இதில், தினகரன் அணியில் இருந்து செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயகுமார், தங்கமணி, எஸ்.பிவேலுமணி, ஓ.எஸ்.மணியன், வைத்தியலிங்கம், வேணுகோவால், சி.வி.சண்முகம் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பேச்சு வார்த்தையின் முடிவு குறித்து இரு அணிகளின் தலைமையிடம் தெரிவிக்கப்படும். அதை தொடர்ந்து, இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிகிறது.