அடிப்படை மனசாட்சியே இல்லாமல் நமது ஆட்சியாளர்கள் நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் தினப்படி கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. அதில் இது எக்ஸ்ட்ரா மைலேஜ் தரக்கூடிய தகவல்...அரசு பணத்தில் மஞ்சள் குளிக்கும் அமைச்சர்கள், அரசு அதிகாரிகளைப் பார்த்து வயிறெரிந்து கொண்டிக்கும் நபர்களுக்கு இந்த செய்தி மேலும் கடுமையான எரிச்சலை தரக்கூடும். எனவே அசிடிட்டி பிரச்னை உள்ளவர்கள், இதய நோயாளிகள், பிரஷர் பிரச்னை உள்ளவர்கள் இந்த செய்தியை மேலும் வாசிக்காது இருத்தல் நலம்.அதாவது தமிழக அமைச்சரவையிலுள்ள அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர் மற்றும் கோட்டையிலுள்ள அரசு உயரதிகாரிகளுக்கு அரசு செலவில் சொகுசு கார்கள் ஏற்கனவே இருப்பது தெரிந்த விஷயமே. இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டின் ஜூன் முதல் டிசம்பர் வரையிலான காலங்களில் தமிழக அரசு தனது சிற்றரசர்களுக்கு பல லட்சங்கள் மதிப்புள்ள கார்களை வாங்கி தந்திருக்கிறது.சபாநாயகர் தனபால் முதல் துணை முதல்வர் பன்னீர் செல்வம் வரை பலர் புதிய கார்களில் பவனி வர துவங்கியுள்ளனர். இதன் மதிப்புகள் பற்றிய சிறு புள்ளிவிபரம் இதோ...சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அரசு கொறடா ராஜேந்திரன் ஆகிய மூவருக்கும் புதிய இனோவா கார்கள் வாங்கப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு ஐம்பத்து எட்டு லட்சத்து நாற்பத்து எட்டாயிரம் ரூபாய்.பன்னீர்செல்வம் மற்றும் மாஃபா பாண்டியராஜன் இருவருக்கும் புதிய இனோவா கார்கள் வாங்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு முப்பத்து எட்டு லட்சத்து தொண்ணூற்று மூன்றாயிரம் ரூபாய்.கால்நடை பராமரிப்பு, பால் வளம் மற்றும் மீன் வளத்துறையின் முதன்மைச் செயலாளராக உள்ள கோபால் ஐ.ஏ.எஸ்.ஸுக்காக ஒரு புதிய வாகனமும், உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டிக்காக பதினாலு புள்ளி நாற்பது லட்சம் ரூபாய் செலவில் ஒரு டொயோட்டா ஆல்டிஸ் காரும் வாங்கப்பட்டுள்ளது. மாநில தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஷீலா ப்ரியாவுக்கு பதினேழு புள்ளி நாற்பத்து ஆறு லட்சம் ரூபாய் சார்பில் புதிய கார் ஒன்றை அரசு வாங்கி தந்துள்ளது.ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, மாநில நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணைய தலைவர் ஆகியோருக்கும் புதிய கார்கள் வாங்கப்பட்டுள்ளன. உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞருக்கு இனோவா கிரிஸ்டா கார் பதினேழு புள்ளி நாற்பத்து ரெண்டு லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்டுள்ளது.ஆக இப்படி வாங்கப்பட்ட பதினோறு கார்களின் மொத்த மதிப்பு ஒரு கோடியே தொண்ணூறு லட்சத்து நாற்பத்து நான்காயிரம் ரூபாயாம்.ஹும்! அரசுப்பேருந்தின் தரைப்பகுதி உடைந்ததால் அந்த ஓட்டை வழியே சாலையில் விழுந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழக்கும் ஏழை மாணவ, மாணவிகளின் ஆன்மா இந்த புள்ளி விபரத்தை கேட்டு சாந்தியடைவதாக!