மு.க. ஸ்டாலினுக்கு அந்த யோகமே இல்லை... எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வராது... அமைச்சரின் சீரியஸ் பேச்சு!

By Asianet TamilFirst Published Jan 27, 2020, 6:56 AM IST
Highlights

அதிமுகவில் யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம், அமைச்சர் ஆகலாம், சேர்மன் ஆகலாம். நான் அமைச்சர் ஆவேன் என்று கனவில்கூட நினைத்ததில்லை. ஆனால், நான் இன்று அமைச்சராக இருக்கிறேன். ஆனால், திமுகவில் அப்படியில்லை. அது ஒரு குடும்ப கட்சி. முதலில் கருணாநிதி, அடுத்து ஸ்டாலின், பின்னர் உதயநிதி.

முதல்வராகும் கனவில் மு.க.ஸ்டாலின் உள்ளார். ஆனால், அவருக்கு முதல்வராகும் அந்த யோகம் இல்லை என்று தமிழக அமைச்சர் கே.சி. கருப்பணன் தெரிவித்தார்.
எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி ஈரோடு மாவட்டம் அந்தியூர் சாலையில் பொதுகூட்டம்  நடைபெற்றது. கூட்டத்தில் ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளரும் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான கருப்பணன் பங்கேற்று பேசினார்.
 “எம்.ஜி.ஆர் தோற்றுவித்த அதிமுக நூறாண்டு கால கட்சியாகும். அதிமுகவில் யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம், அமைச்சர் ஆகலாம், சேர்மன் ஆகலாம். நான் அமைச்சர் ஆவேன் என்று கனவில்கூட நினைத்ததில்லை. ஆனால், நான் இன்று அமைச்சராக இருக்கிறேன். ஆனால், திமுகவில் அப்படியில்லை. அது ஒரு குடும்ப கட்சி. முதலில் கருணாநிதி, அடுத்து ஸ்டாலின், பின்னர் உதயநிதி, அதன் பிறகு அவருடைய மகன் என குடும்ப அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள்.
தலைமையில் மட்டுமல்ல, மாவட்டம், ஒன்றியங்களிலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் கட்சி பொறுப்பிலோ அரசு பொறுப்பிலோ இருப்பார்கள். தற்போது முதல்வராகும் கனவில் மு.க.ஸ்டாலின் உள்ளார். ஆனால், அவருக்கு முதல்வராகும் அந்த யோகம் இல்லை. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி, ஸ்டாலின் முதல்வர் ஆக முடியாது.

 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் வாக்குறுதியை நம்பி மக்கள் வாக்களித்து 39 தொகுதிகளில் வெற்றி பெற வைத்தார்கள். ஆனால், 39 பைசாவுக்குகூட பிரயோஜனம் இல்லை. விக்கிரவண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. மக்கள் உண்மையைப் புரிந்துகொண்டனர். அதனால்தான் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் 90 சதவீத வெற்றியை அதிமுக பெற்றது. இங்குள்ள ஒரு சில எம்எல்ஏக்களால் 100 சதவீத வெற்றி பறிபோனது.” என்று கருப்பணன் பேசினார்.

click me!